சினிமா

தமிழ் திரையுலகில் அதிகரிக்கும் விவாகரத்துகள்!

மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி இன்று அறிவித்தார்.

யோகேஷ் குமார்

தமிழ் திரையுலகில் சமீப காலமாக விவாகரத்து தொடர்பான அறிவிப்புகள் அதிகரித்துள்ளன.

மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி இன்று அறிவித்தார்.

ஜெயம் ரவி, ஆர்த்தி திருமணம் ஜூன் 4, 2009-ல் காதல் திருமணமாக நடைபெற்றது. இவர்களுக்கு ஆரவ், அயான் என இரு மகன்கள் உள்ளார்கள். அண்மைக் காலமாகவே இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் அதனை அதிகாரபூர்வமாக அறிவித்தார் ஜெயம் ரவி.

முன்னதாக கடந்த மே மாதத்தில், தங்களின் 11 வருட திருமண உறவு முடிந்துவிட்டதாக பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும், பாடகி சைந்தவியும் அறிவித்தனர். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு.

இதைத் தொடர்ந்து, “நானும், ஜி.வி. பிரகாஷும் 24 ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக இருக்கிறோம். பள்ளிப் பருவத்தில் இருந்து தொடங்கிய இந்த நட்பு தொடரும்” என்று சைந்தவி தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த 2022 ஜனவரியில் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினி ஆகியோரும் பிரிந்து வாழ்வதாக அறிவித்தனர். தனுஷ் - ஐஸ்வர்யா திருமணம் கடந்த 2004-ல் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துவிட்டதாக அறிவித்தனர்.

அதேபோல் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் இசையமைப்பாளர் இமான் - மோனிகா ஆகியோரும் இந்த முடிவை எடுத்தனர்.