மெய்யழகன் படத்தால் 25 சதவீதம் வரை லாபம் கிடைத்ததாக சூர்யா தெரிவித்துள்ளார்.
‘96’ படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அர்விந்த் சாமி உள்பட பலர் நடித்த படம் ‘மெய்யழகன்’. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. இசை - கோவிந்த் வசந்தா. இப்படம் செப்டம்பர் 27 அன்று வெளியானது.
இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக படத்தின் நீளம் மிகவும் அதிகமாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இதன் தொடர்ர்சியாக மெய்யழகன் படத்தில் 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடல் தொடரும் என இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே கங்குவா படத்தின் புரமோஷன் தொடர்பாக நடிகர் சூர்யா அளித்த பேட்டி ஒன்றில் மெய்யழகன் படத்தின் வசூல் விவரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சூர்யா, “மெய்யழகன் படத்தை தயாரித்ததில் பெருமை அடைகிறேன். படத்தின் வசூல் குறித்து பேசுவது அவசியமில்லை என நினைக்கிறேன். அப்படம் 25 சதவீதம் வரை லாபம் சம்பாதித்துக் கொடுத்தது.
10 சதவீதம் லாபம் கிடைக்கும் என தயாரித்த படம் எனக்கு 25 சதவீதம் லாபத்தை கொடுத்தது. ஒரு படம் எவ்வளவு லாபம் என்பது தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும்.
மக்களின் வாழ்க்கை முறை, மதிப்புகள், கலாச்சாரம் போன்ற அனைத்தையும் பேசிய படம் மெய்யழகன். சமீபத்தில் வெளியான படங்களில் இவை அனைத்தையும் பேசிய ஒரே படம் மெய்யழகன் தான். அதனால், அதனை மிகவும் முக்கியமான படமாக பார்க்கிறேன். எனவே படத்தின் வசூலைப் பற்றி கவலைப்பட வேண்டாம்” என்றார்.