நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவருக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக் மீது நடிகை ரேவதி சம்பத் பாலியல் வன்கொடுமை புகார் அளித்த நிலையில், சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
கடந்த 2016-ல் மஸ்கட் விடுதியில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் குறிப்பிட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ரேவதி சம்பத் புகார் அளித்தார்.
இதன் தொடர்ச்சியாக திருவனந்தபுரம் காவல் துறையினர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் பிறகு தன் மீது ரேவதி சம்பத் பொய் குற்றச்சாட்டு வைத்ததாகக் கூறி கேரள டிஜிபியிடம் சித்திக் புகார் அளித்திருந்தார். தனக்கு ஜாமின் வழங்கக் கோரி சித்திக் தொடர்ந்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில், சித்திக் மேல்முறையீடு செய்தார்.
சித்திக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த நிலையில், அவரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் நடிகர் சித்திக்கிற்கு விசாரணை நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் உள்பட சில நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.