ஷங்கர் 
சினிமா

ஒரு படத்துக்கு வசனம் எப்படி எழுத வேண்டும்?: ஷங்கருக்கு சுஜாதா சொன்ன யோசனைகள்

பக்கம் பக்கமாக எழுதாமல் 2 வரிகள் அல்லது 2 வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை சரியாகவும், தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் சொல்லிவிடுவார்.

யோகேஷ் குமார்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996-ல் வெளியான படம் ‘இந்தியன்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்தியன்-2’ படம் உருவானது.

இப்படம் ஜூலை 12 அன்று வெளியான நிலையில் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இதற்கு படத்தின் வசனங்களும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

ஷங்கர் படங்களின் வசனங்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில் 1996-ல் வெளியான இந்தியன் படத்துக்கு பிரபல எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதினார். அதுவே இருவரும் இணைந்து பணியாற்றிய முதல் படம்.

இதன் பிறகு தொடர்ச்சியாக 1998 - 2007 வரை ஜீன்ஸ் தவிர முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி என ஷங்கரின் அனைத்துப் படங்களுக்கும் சுஜாதா தான் வசனம் எழுதினார். சுஜாதாவின் மறைவுக்குப் பிறகு ஜெயமோகன், சுபா, மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, லக்ஷ்மி சரவணகுமார் ஆகியோர் ஷங்கருடன் இணைந்து வசனம் எழுதியுள்ளார்கள்.

இந்நிலையில் 2010-ல் நடைபெற்ற சுஜாதாவின் 2-வது நினைவு தினத்தில் பேசிய ஷங்கர், ஒரு படத்துக்கு வசனம் எப்படி எழுத வேண்டும்? என்பதை சுஜாதா கற்றுக்கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

ஷங்கர் பேசியதாவது:

“எனக்கு புத்தகம் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் வந்ததற்கு சுஜாதா தான் காரணம். அவர் எழுதியதை படிக்கும் போது படம் பார்ப்பது போல் இருக்கும். இந்தியன் படத்துக்கு வசனம் எழுத அவரை அணுகினேன். மிகவும் எளிமையான மனிதர். பணத்தைவிட வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். இந்தியன் படத்தின் வெற்றிக்கு சுஜாதா மிக முக்கியமான காரணமாக அமைந்தார்.

அவருடைய வசனங்கள் எவ்வளவு வலிமையாகை இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். பக்கம் பக்கமாக எழுதாமல் 2 வரிகள் அல்லது 2 வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை சரியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் சொல்லிவிடுவார்.

இந்தியன் படத்தில் கூட, “மற்ற நாடுகளில் கடமையை மீற தான் லஞ்சம், இங்கு கடமையை செய்யவே லஞ்சம்” என்று எழுதியிருப்பார். அதேபோல அந்நியன், சிவாஜி, முதல்வன், எந்திரன் போன்ற படங்களிலும் நிறைய சிறப்பான வசனங்களை எழுதினார். எந்திரன் படத்தின் காட்சிகள் குறித்தும் திரைக்கதை குறித்தும் அவரிடம் பேசினேன். அனைத்தும் சிறப்பாக உள்ளது என்று சொல்லிவிட்டு, அடுத்த நாள் எனக்கு ஒரு புத்தகத்தை கொடுத்தார். அதைப் படித்தவுடன் இதுபோன்ற காட்சிகளை அவர் 1960-களிலேயே எழுதியிருப்பதைத் தெரிந்துக் கொண்டேன்.

எனக்கு நல்ல ஆசிரியராகவும் இருந்தார். வசனங்களை முடிக்காமல் கேமராவை எடுக்க வேண்டாம் என்பார். ஒரு காட்சி ஒரு பக்கத்துக்கு மேல் இருக்கக்கூடாது என்பார்.

எந்திரன் படத்தில் எந்தவொரு வசனமும் இரு வரிகளுக்கு மேல் இருக்காது. இரு வரிகளில், மூன்று வார்த்தைகளில் தான் இருக்கும்.

எதுவாக இருந்தாலும் சொல்லக்கூடாது, காட்சிகளில் காட்டவேண்டும் என்பார். எனவே, ஒரு படத்துக்கு வசனம் எப்படி எழுத வேண்டும் என்பதற்கு மிகவும் உதவியாக இருந்தார். சில இடங்களில் வசனம் எழுதமுடியாமல் சிக்கிக்கொண்டால், அடுத்த நாள் ஒரு சில புத்தகங்களை கொடுத்து அதனை படிக்கச் சொல்வார். அதைப் படித்தவுடன் எப்படி அந்த சிக்கலை திருத்திக் கொள்வது என்பதையும் கற்றுக் கொடுப்பார். மேலும், ஒரு சில படங்களில் புத்தகங்களை படிக்காமலேயே எப்படி நான் அந்த சிக்கலை எதிர்கொண்டேன் என்பதையும் கூறி பாராட்டுவார்.

ஓர் எழுத்தாளர் என்பதையும் தாண்டி என் குடும்பத்துக்கு ஒரு நல்ல நண்பராகவும் இருந்தார். எப்போது கவலை இருந்தாலும் அவரிடம் பேசினால் சரியாகிவிடும். அவரை மிகவும் மிஸ் செய்கிறேன்” என்றார்.