சுதா கொங்கரா  ANI
சினிமா

என் தவறுக்கு வருந்துகிறேன்: சாவர்க்கர் குறித்த கருத்துக்கு சுதா கொங்கரா பதில்!

ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை.

யோகேஷ் குமார்

சாவர்க்கர் குறித்த தவறான கருத்துக்கு இயக்குநர் சுதா கொங்கரா விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குநர் சுதா கொங்கரா சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்து பேசியிருந்தார்.

இதைத் தொடர்ந்து சுதா கொங்கராவிற்கு எதிராக இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோரின் வரலாற்றை, சாவர்க்கரின் வரலாறாக பேசியுள்ளார் என்று விமர்சித்தனர்.

இந்நிலையில் என் தவறுக்கு வருந்துகிறேன் எனக் கூறி சுதா கொங்கரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சுதா கொங்கராவின் பதிவு:

“என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன்.

ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன்.

மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை.

எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி.

ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்”.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.