படம்: https://x.com/mari_selvaraj
சினிமா

பா. இரஞ்சித்தின் வேட்டுவம் படப்பிடிப்பில் சண்டைக் கலைஞர் உயிரிழப்பு

ஸ்டண்ட் காட்சியின்போது கார் கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிகிறது.

கிழக்கு நியூஸ்

பா. இரஞ்சித்தின் வேட்டுவம் படப்பிடிப்பில் கார் ஸ்டண்ட் காட்சிகளைப் படம்பிடிக்கும்போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்துள்ளார்.

பா. இரஞ்சித் எழுதி இயக்கி வரும் படம் வேட்டுவம். ஆர்யா, ஷோபிதா துலிபாலா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் இதில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

ஞாயிற்றுக்கிழமை கார் ஸ்டண்ட் காட்சிகளைப் படம்பிடிக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. அப்போது மோகன் ராஜ் என்ற சண்டைக் கலைஞர் கார் ஸ்டண்ட் காட்சியை மேற்கொண்டிருக்கிறார். கார் பறப்பது போல படம்பிடித்திருக்கிறார்கள். இந்த காரில் மோகன் ராஜ் இருந்திருக்கிறார்.

ஆனால், ஸ்டண்ட் காட்சியின்போது கார் கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிகிறது. இதுதொடர்புடைய காணொளி வெளியாகியிருக்கிறது. காற்றில் பறந்த கார் மிக மோசமான நிலையில் கீழே விழுந்தைக் காணொளியில் பார்க்க முடிகிறது.

இதைத் தொடர்ந்து, படக்குழுவினர் அருகே சென்று சண்டைக் கலைஞர் மோகன் ராஜை மீட்டிருக்கிறார்கள். தொடர்ந்து, மருத்துவமனைக்கும் மோகன் ராஜ் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், வரும் வழியிலேயே மோகன் ராஜ் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோகன் ராஜ் மறைவுக்கு நடிகர் விஷால், இயக்குநர் மாரி செல்வராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

மாரி செல்வராஜ் பதிவு

"சண்டை பயிற்சியாளர் மோகன் ராஜ் அண்ணன் மரணம் என்ற செய்தி இதயத்தில் அதிர்ச்சியையும் வேதனையையும் நிரப்புகிறது. வாழை இறுதிகாட்சியில் நீங்கள் அந்த லாரியை துணிச்சலாக கவிழ்த்து எல்லாரையும் கலங்கடித்த நாட்களை நெஞ்சு படபடக்க இன்று நினைத்துகொள்கிறேன். நீங்களும் உங்களின் துணிச்சலும் என்றும் நினைவில் இருப்பீர்கள் அண்ணா."

விஷால் பதிவு

"ராஜுவை பல ஆண்டுகளாகத் தெரியும். என் படங்களில் நிறைய ஆபத்துடைய ஸ்டண்டுகளை செய்துள்ளார். மிகவும் துணிச்சலானவர். வெறும் பதிவுடன் இல்லாமல் அவருடைய குடும்பத்தின் எதிர்காலத்துக்கு துணை நிற்பேன்" என்று விஷால் பதிவிட்டுள்ளார்.

Vettuvam | Pa. Ranjith | Mohan Raj | Stunt Artist | Stunt Scene | Action Sequence | Tamil Cinema