கேரளத்தில் 'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' (Sthanarthi Sreekuttan) என்ற படம் ஏற்படுத்திய தாக்கத்தால், பள்ளிகள் சில மாணவர்களை வரிசைப்படி அமரவைக்காமல் அரைவட்ட அமர்வு முறையில் அமரவைக்கத் தொடங்கியுள்ளன.
அஜு வர்கீஸ், ஜானி ஆண்டனி மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் சிலர் நடித்துள்ள படம் ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன். அறிமுக இயக்குநர் வினேஷ் விஸ்வநாத் படத்தை இயக்கியுள்ளார். பல தாமதத்துக்குப் பிறகே இப்படம் திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் வெளியாகி 7 மாதங்களுக்குப் பிறகு தான் அண்மையில் ஓடிடி தளத்தில் படம் வெளியானது.
பள்ளிகளில் மாணவர்கள் வரிசைப்படி அமரவைக்கப்படும் முறையால், மாணவர்களிடையே உளவியல் ரீதியாக ஏற்படும் தாக்கம் குறித்து இப்படம் பேசியிருந்தது. அரைவட்ட அமர்வு முறையில் மாணவர்கள் அமரவைக்கப்பட்டிருக்கும் காட்சி ஒன்று படத்தில் இடம்பெற்றிருந்தது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மத்தியில் அமரும் வகையில் இந்த அமைப்பு இருக்கிறது.
இப்படத்தின் வெளியான பிறகு, கேரளத்தில் சில பள்ளிகள் மாணவர்களை வரிசைப்படி அமரவைக்காமல் அரைவட்ட அமர்வு முறையில் அமரவைக்கும் முறையைக் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளன. பள்ளி இதைப் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் பட இயக்குநர வினேஷ் விஸ்வநாத்தையும் டேக் செய்து வருகிறார்கள்.
முதன்முதலாக கொல்லத்தில் ஆர்விவி மேல்நிலைப் பள்ளியில் இந்த முறை கடைபிடிக்கப்பட்டது. இப்பள்ளி கேரள அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் கேபி கணேஷ் குமாரால் நிர்வகிக்கப்படுகிறது. இவர் மலையாள சினிமாவில் நடித்தும் வருகிறார். இதுவரை குறைந்தபட்சம் 6 பள்ளிகளில் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்ஸ்டகிராமில் தன்னை டேக் செய்வதன் மூலம் தனக்கு இது தெரிய வருவதாகவும் இயக்குநர் வினேஷ் விஸ்வநாத் கூறியுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.