படம்: எக்ஸ் தளம் |சிவகார்த்திகேயன்
சினிமா

சிவகார்த்திகேயனின் அயலான்: விமர்சனம்

சுவாமிநாதன்

நாம் இதுவரை பார்த்து வந்துள்ள நம்ம ஊருக்கேற்ற மிகச் சாதாரண ஒரு கமர்ஷியல் கதைக்களத்துக்குள் ஏலியன் கதாபாத்திரத்தை நுழைத்தால் எப்படி இருக்கும்? அதுதான் அயலான்.

விண்கல் போன்ற ஒரு சாதனம் பூமிக்கு வருவதிலிருந்து தான் கதை தொடங்குகிறது. இதை ஸ்பார்க் என அழைக்கிறார்கள். வழக்கம்போல், பணப் பலம் படைத்த தொழிலதிபர் இதை தனது சுயலாபத்துக்காக வணிகத்தைப் பெருக்க இயற்கைக்கு எதிராகப் பயன்படுத்த முனைகிறார். தங்களுடைய கிரகத்தைச் சேர்ந்த ஸ்பார்க் எனும் இந்த சாதனத்தைத் திரும்ப எடுத்துச் செல்வதற்காக 'சித்தார்த்' குரலில் அயலான் (வேற்றுக்கிரகவாசி) பூமிக்கு (நம் சென்னைக்கு) வருகிறார். கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் சிவகார்த்திகேயன் இவர்களுக்கு நடுவே எப்படி நுழைகிறார், என்ன செய்கிறார், இறுதியில் சென்னையைக் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் அயலானின் திரைக்கதை.

சிவகார்த்திகேயனின் வாழ்வியல், குணாதிசயங்களை விளக்கும் வகையில் அவரது கிராம வாழ்க்கை விவரிக்கப்பட்டுள்ளது. இயற்கை மீதும், உலகம் அனைவருக்குமானது என்கிற தத்துவத்தின் பெயரிலும் வாழ்ந்து வருவதால் ஊரோடு ஒத்துப்போக முடியாமல் சிக்கலை எதிர்கொள்கிறார். இவை வெறும் கதாநாயகனுக்கான காட்சிகளாக அல்லாமல், பின்பகுதியில் கதையுடன் சரியாகத் தொடர்புபடுத்தியிருக்கிறார் இயக்குநர்.

கதாநாயகனாக சிவகார்த்திகேயன் இருப்பதாலோ என்னவோ, அவரது விளையாட்டுத்தனம் கதையில் கலக்கப்பட்டுள்ளது. இது, செய்தியின் ஆழத்தைக் கடத்தத் தவறுகிறது. உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்துவதில் இருக்கும் பிரச்னை இதிலிருந்து தொடங்குகிறது.

சென்னை வந்து கருணாகரன், யோகிபாபு ஆகியோருடன் சிவகார்த்திகேயன் இணையும் விதம் ஒட்டக்கூடிய வகையில் இல்லை. அயலான், பூமியில் கால்பதித்தவுடன் செய்யும் விஷயங்கள், ஏதோ சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் என்கிற உணர்வைத் தருகிறது. படங்களில் லாஜிக் கேள்விகளை எழுப்புவது நியாயமற்றது என்றாலும், ஒவ்வொரு கதைக்கும் லாஜிக் மீறல்களுக்கு ஓரெல்லை இருக்கிறது. அந்த எல்லையைத் தாண்டுபோது ரசிகர்கள் மனதில் எழும் லாஜிக் கேள்விகள் தவிர்க்க முடியாது.

அயலான் செய்யும் விஷயங்கள் அனைத்தையும் இவர் ஒரு வேற்றுக்கிரகவாசி என்கிற ஒரே காரணத்தால் அதீத சக்தி படைத்திருக்கிறார் என்பதாகவே நம்ப வேண்டியிருக்கிறது. அயலானின் உலகம் குறித்தும், அவர்களது சக்தி குறித்தும் சிறுகுறிப்பை எங்காவது விளக்கியிருந்தால், கதை விவரிப்புக்கு அது பலம் சேர்த்திருக்கும்.

அதீத சக்தி படைத்தவர் உலகைக் காப்பாற்ற முனைகிறார் என்றால், எதிர்புறம் இருப்பவர் இவரைக் காட்டிலும் அதீத சக்தியைக் கொண்டவராக இருந்திருக்க வேண்டும். அப்போதுதான் இருவருக்கிடையிலான போரில் ஒரு சுவாரசியம் ஏற்படும். ஆனால், இந்தப் படத்தில் நமக்கு பழக்கப்பட்ட குணாதிசயங்களை உடையவரே வில்லனாக இருக்கிறார். கோட் சூட் போட்டு கோபமாக நடக்கிறார், உலகமே அழிந்தாலும் வணிகம் முக்கியம் என கோபமாகப் பேசுகிறார், எதிர்த்துப் பேசுபவர்களைப் போட்டுத்தள்ளுகிறார் என்பதைத் தாண்டி இவருக்கென்று கதைப் பின்னணி எதுவும் இல்லாமல் மிகவும் மேம்போக்காக உள்ளது. எந்தப் புதுமையும் இல்லாமல் வலுவிழந்த வில்லன் கதாபாத்திரம். கதாநாயகியாக வரும் ரகுல் பிரீத் சிங் பாத்திரத்தைப் படத்திலிருந்து நீக்கினாலும்கூட கதை எவ்வித சிக்கலும் இல்லாமல் நகரும்.

சிவகார்த்திகேயன், கருணாகரன், யோகி பாபு குழுவுடன் இணைந்து அயலான் செய்யும் சுட்டித் தனங்கள் ரசிக்கக்கூடிய வகையில் உள்ளன. வழக்கம்போல யோகிபாபுவின் 'கவுன்ட்டர்கள்' திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. அயலானின் உருவம், உடல்மொழி குழந்தைகளிடம் தாக்கத்தை உண்டாக்கலாம். படத்தின் முதல் பாதி வேகமாக நகர்வதற்கு இந்தக் காட்சிகள் உதவுகின்றன. குழந்தைகளுக்கென்று கூடுதல் காட்சிகளை ஒதுக்கியிருந்தால் நிச்சயம், குழந்தைகள் மத்தியில் புதிய சுட்டியாக 'அயலான்' இடம்பெற்றிருக்கும்.

குறைபாடுகளுடன் குட்டி இருந்தால் அதை மற்ற விலங்குகள் கொன்றுவிடும், மனிதர்கள் மட்டுமே குறைபாடுகளுடன் இருக்கும் குழந்தைகளை ஏற்றுக்கொண்டு அன்பை வெளிப்படுத்துவார்கள் என்கிற வசனத்தின் மூலம் மனிதம் மீதான நம்பிக்கையை விதைக்க முயன்றுள்ளார் ரவிக்குமார். இயற்கை மற்றும் உலகம் அனைவருக்குமானது என்கிற தத்துவத்தை மிக ஆழமாக விதைக்க முயற்சித்திருக்கிறார். உலகம் அழிந்தால் அது மனிதர்களால் மட்டுமே என்றும், அதைக் காப்பாற்ற மனிதர்களால் மட்டுமே முடியும் என்பதையும் செய்தியாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் வழக்கமான விளையாட்டுத்தனத்தால் சில இடங்களில் காப்பாற்றுகிறார். வலுவிழந்த திரைக்கதையால் அவரது சில மாஸ் வசனங்கள், மாஸ் உணர்வைத் தரத் திணறுகிறது.

இருந்தபோதிலும், தொழில்நுட்பத்தில் அயலான் வித்தை காட்டியிருக்கிறது. அயலானின் உருவ அசைவுக்கான கிராஃபிக்ஸ் பணிகள் சிறப்பாக வந்துள்ளன. உணர்வுகள் துல்லியமாகத் தெரியும் அளவுக்கு மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது படம் பார்க்கும்போது தெரிகிறது. வேற்றுக்கிரக உலகை ஒரு காட்சியில் காட்டியிருப்பார்கள். அதுவும் பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது. பின்னணி இசையிலும், பாடல்களிலும் ஏ.ஆர். ரஹ்மான் படத்துக்கு இன்னும் கொஞ்சம் பலம் சேர்த்திருக்கலாம்.

தமிழ் சினிமாவில் ஏலியன்களைக் கொண்டு கதை உருவாக்கலாம் என்கிற துணிச்சல் மிகுந்த புதுமையான முயற்சிக்கு ரவிக்குமாருக்குப் பாராட்டுகள். இத்தகைய கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவிலும் சாத்தியம் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எந்திரன் முதல் பாக இறுதியில் சிட்டி ரோபோ தன்னைத்தானே அழித்துக்கொள்ளும்போது நம்முள் ஓர் உணர்வு எழும். அதில் 50 சதவீதம் கூட அயலானின் இறுதிக் காட்சியில் நமக்கு எழாது. சென்னை ஆபத்தை எதிர்கொள்கிறது என்கிற உணர்வும் இல்லை, சென்னை காப்பாற்றப்பட்டவுடன் எழ வேண்டிய பெருமூச்சு உணர்வும் இல்லை, அயலான் பிரிந்து செல்லும்போது வந்திருக்க வேண்டிய சோக உணர்வும் நம்மிடம் இல்லை. பார்த்துப் பழகிய ஒரு கதையை, வெறும் ஏலியன் என்கிற விஷயத்தை மட்டும் கொண்டு சுமாரான திரைக்கதையைக் கொடுத்த காரணத்தால் அயலான் தடுமாறுகிறது.