சினிமா

வசூல் முக்கியம்தான்: அமரன் குறித்து சிவகார்த்திகேயன்

மற்ற படங்களின் வசூலை தாண்டியதா என்பதை பற்றி நான் யோசிக்க மாட்டேன்”.

யோகேஷ் குமார்

அமரன் படத்தின் வசூல் ஏன் மிகவும் முக்கியம் என்பது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்பட பலர் நடித்த படம் ‘அமரன்’. இசை - ஜி.வி. பிரகாஷ் குமார்.

இந்திய நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். இப்படம் அக்.31 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் அமரன் படத்தின் கொண்டாட்ட விழா நேற்று நடைபெற்றது.

இதில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:

“அமரன் படம் ரூ. 150 கோடியை தாண்டிவிட்டதாக சொல்கிறார்கள். இன்னுமும் வசூல் செய்யும் என்கிறார்கள். வசூல் மிகவும் முக்கியம். ஏனென்றால், தயாரிப்பாளர் பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கிறார். எனவே, நிறைய வசூல் செய்தால் மட்டுமே, இதுபோன்ற படங்கள் எடுக்க வேண்டும் என தயாரிப்பாளருக்குத் தோன்றும்.

அதைத் தாண்டி எனக்கு வசூல் ஏன் முக்கியம் என்றால், என்னுடைய படங்களுக்கு இன்னும் நிறைய பட்ஜெட் கிடைக்கும். அதனால் மக்களுக்கு இன்னும் பெரியப் படங்களை என்னால் கொடுக்க முடியும். அதனால் மட்டுமே வசூலை முக்கியமாக பார்க்கிறேன். மற்ற படங்களின் வசூலை தாண்டியதா என்பதை பற்றி நான் யோசிக்க மாட்டேன்”.

இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.