சிவகார்த்திகேயன்  
சினிமா

இது உதவி இல்லை என் கடமை: தேசிய நெல் திருவிழாவில் சிவகார்த்திகேயன்

“நெல் ஜெயராமன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி”.

யோகேஷ் குமார்

திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனுக்கு ‘உழவர்களின் தோழன்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சார்பில் தேசிய நெல் திருவிழா திருத்துறைப்பூண்டியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இந்த பாரம்பரிய விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அவருக்கு ‘உழவர்களின் தோழன்’ என்ற விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பேசிய அவர், “இது உதவி இல்லை என் கடமை” என்றார்.

சிவகார்த்திகேயன் பேசியதாவது:

“நம்மாழ்வார் ஆரம்பித்து வைத்து, அதில் நெல் ஜெயராமன் இணைந்து அமைதியாக ஒரு சாதனையைச் செய்துள்ளனர். 174 பாரம்பரிய நெல் விதைகளை மீட்டு அதனை அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு என்ன திருப்பிசெய்தாலும் போதாது. நான் செய்ததை உதவி என சொல்ல வேண்டாம், அது கடமை.

‘உழவர்களின் தோழன்’ என்பது பெரிய வார்த்தை. இந்த விருது எனக்கு பெருமையைக் கொடுக்கிறது. இயற்கை முறையில் சாப்பிடுவது மனதுக்கு நிம்மதியை அளிக்கிறது. ஊருக்கே அந்த நிம்மதியை அளிக்கும் விவசாயிகளை பற்றி பேச வார்த்தை இல்லை. நெல் ஜெயராமன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி. இதன் புகழ் உலகம் முழுவதும் பரவும். பல தலைமுறைகளுக்காக இதை செய்து வருகின்றனர். இதற்கான அனைத்து உதவிகளையும் நான் செய்வேன். என்னுடைய படங்களிலும் இது குறித்து பேச முயற்சி செய்வேன்” என்றார்.