ஐசரி கணேஷ் 
சினிமா

சிம்புவை நடிக்கக் கூடாது என்று சொல்லவில்லை: தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்

யோகேஷ் குமார்

தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்கக்கூடாது என்று சொல்லவில்லை, எங்களுக்கு ஒரு படம் நடித்துக் கொடுத்து விட்டு சென்றால் நன்றாக இருக்கும் என்றுதான் சொன்னோம் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசியுள்ளார்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2022 செப்டம்பர் மாதம் வெளிவந்த படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு- 2 படம் நடைபெறும் என்று படகுழுவினர் அறிவித்தனர். இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்புவிடம் மற்றொரு படத்தில் நடிக்க ரூ.1 கோடி முன்பணமாகக் கொடுத்ததாகக் கூறப்பட்டது. ஒரு சில காரணத்தால் அந்த படம் தொடங்கவில்லை.

இதைத் தொடர்ந்து வாங்கிய முன்பணத்தைத் திருப்பித் தருமாறு சிம்புவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பிறகு ஐசரி கணேஷ்- சிம்பு இடையே கருத்து வேறுபாடு நடந்ததாக சில தகவல்கள் வெளியானது. இது குறித்து ஐசரி கணேஷ் கடந்த ஜனவரி மாதத்தில், “எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சிம்பு அப்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். சிம்புவுடனான அடுத்த படம் சரியான நேரத்தில் நடைபெறும்” என்றார்.

முன்னதாக ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் சிம்புவை நடிக்க வைக்க ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஒரு சில காரணத்தால் அந்த படம் தொடங்கவில்லை. இப்படம் கைவிடப்பட்டது என்றும் சிம்புவுக்கு பதிலாக வேறு நடிகரை நடிக்க வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்கக்கூடாது என சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார் ஐசரி கணேஷ்.

‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு நடிக்கக்கூடாது. ஏற்கெனவே அவர் ஒப்பந்தம் செய்த கொரோனா குமார் படத்தை முடித்து கொடுக்காமல் அவர் வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது. இது சம்பந்தமாக அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளது, என அந்த புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஹிப் ஹாப் ஆதியின் ‘பி.டி. சார்’ படம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் சிம்புவின் புகார் குறித்து கேட்டபோது,

“இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாங்கள் சிம்புவை நடிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. எங்களுக்கு ஒரு படம் நடித்துக் கொடுத்து விட்டு சென்றால் நன்றாக இருக்கும் என்றுதான் கோரிக்கை வைத்தோம். நான் ரஜினியை சந்தித்தது உண்மைதான். அவரும் எங்கள் தயாரிப்பில் படம் நடித்துத் தருவதாக சொல்லி இருக்கிறார். சீக்கிரம் நல்ல செய்தி வரும். வெந்து தணிந்தது காடு - 2 நடக்க வாய்ப்பு இருக்கிறது” என்றார்.