சினிமா

குட் பேட் அக்லி: அஜித் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு

ஆனால், ரசிகர்களைச் சென்றடைந்த செய்தி இதுவல்ல.

கிழக்கு நியூஸ்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் அஜித் இடம்பெறும் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி அடுத்த மாதம் வெளியாகவுள்ளதால், இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடித்து வருகிறார். விடாமுயற்சியைக் காட்டிலும் குட் பேட் அக்லி படத்தின் அடுத்தடுத்த அப்டேட் ரசிகர்களிடத்தில் உற்சாகத்தை உண்டாக்கியது.

இதன் சமீபத்திய அப்டேட்டை ஆதிக் ரவிச்சந்திரன் எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்டார். குட் பேட் அக்லி படத்தில் அஜித் இடம்பெறும் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக ஆதிக் ரவிச்சந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

"வாழ்நாள் வாய்ப்பைக் கொடுத்த அஜித்துக்கு நன்றி. கனவு நனவானது. அஜித்துக்கு கடைசி நாள் படப்படிப்பு. மிகவும் அழகான பயணம் இது."

ஆனால், ரசிகர்களைச் சென்றடைந்த செய்தி இதுவல்ல.

இந்தப் பதிவுடன் ரசிகர்களுக்குக் கூடுதல் பரிசாக அஜித்தின் இளமைக் கால கதாபாத்திரத்தில் உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார் ஆதிக்.

கடந்த சில வருடங்களாகவே, வயது மற்றும் எடையில் மாற்றம் இல்லாமல் இயல்பில் எப்படி இருப்பாரோ அதே தோற்றத்தில் படங்களிலும் நடித்து வந்தார் அஜித். இந்தச் சூழலில் எடையைக் குறைத்தபடி, இளமைத் தோற்ற கதாபாத்திரத்தில் இருக்கும் அஜித்தைக் கண்டு அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் பூரிப்படைந்தார்கள். அதுவும் அமர்க்களம் படத்தில் இடம்பெற்ற மேகங்கள் என்னைத் தொட்டு பாடலையும் ஆதிக் இணைத்திருந்தது கூடுதல் சிறப்பம்சம்.

பொங்கலுக்கு வெளியாகவுள்ள விடாமுயற்சியைக் காட்டிலும் குட் பேட் அக்லி படத்துக்கு அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்று சொல்லும் அளவுக்கு இந்தப் புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.