ஷங்கர்
ஷங்கர் 
சினிமா

எந்த சவாலையும் சமாளித்தார் கமல்: ஷங்கர்

யோகேஷ் குமார்

அனிருத், தான் எதிர்பார்த்ததைவிட சிறப்பானப் பாடல்களை இசையமைத்துக் கொடுத்துள்ளதாக இயக்குநர் ஷங்கர் பேசியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996-ல் வெளியான படம் ‘இந்தியன்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்தியன்-2’ படம் உருவாகி உள்ளது. இப்படம் ஜூலை 12-ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர் போன்றோர் நடித்துள்ளனர். இசை - அனிருத். ஒளிப்பதிவு - ரவி வர்மன். இந்நிலையில் படக்குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அதில் ஷங்கர் பேசியதாவது:

“இன்றைய சூழலில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படியிருக்கும் என்பது தான் ‘இந்தியன் 2’ படத்தின் கதை. இப்படத்தின் முதல் பாகம் தமிழ்நாட்டில் நடப்பதாக இருந்தது. ஆனால், ‘இந்தியன் 2’ தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநிலங்களுக்கும் கதை விரிவடைகிறது.

‘இந்தியன் 2’ படம் இவ்வளவு சிறப்பாக வந்ததற்கு முதல் காரணம் கமல் தான். முதல் பாகத்தில் அவருக்கு 40 நாள்கள் மட்டும் தான் அவருக்கு மேக்கப் போட்டோம். இப்படத்தில் 70 நாட்கள் போட்டிருக்கிறோம். தினமும் 3 மணிநேரம் மேக்கப் போட வேண்டும். அந்த நேரத்தில் அவரால் சரியாக சாப்பிட முடியாது. நீராகாரம் மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக கமல் வந்துவிடுவார். படப்பிடிப்பு முடிந்த பிறகு நாங்கள் கிளம்பிவிடுவோம். கடைசியாக தான் கமல் கிளம்புவார். ஏனென்றால், மேக்கப்பை கலைக்கவே 1 மணி நேரமாகும்.

ஒரு காட்சியைப் படம்பிடிக்கும் போது காலை தொடங்கி மாலை வரை அவர் ஒரு ரோப்பில் தொங்க வேண்டும் என்ற சூழல் இருந்தது. அப்படி 4 நாள்கள் ரோப்பில் தொங்கி நடித்தார் கமல். அதே சமயம் பஞ்சாபி மொழியில் பேச வேண்டும். எந்த சவாலாக இருந்தாலும் அதனை எதிர்கொண்டார் கமல். நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பானப் பாடல்களை இசையமைத்துக் கொடுத்துள்ளார் அனிருத்” என்றார்.