செல்வராகவன் 
சினிமா

உண்மையான ஆன்மிக குரு யார்?: செல்வராகவன் விளக்கம்

“உலகத்தில் இருக்கும் எல்லா மதமும் போதிப்பது கடவுள் நமக்குள் இருக்கிறார் என்பது தான்”.

யோகேஷ் குமார்

உண்மையான ஆன்மிக குரு யார் என்பது குறித்து இயக்குநர் செல்வராகவன் கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது சில கருத்துகளைப் பதிவிடுவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து பேசியது பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில் உண்மையான ஆன்மிக குரு யார் என்பது குறித்து செல்வராகவன் பேசியுள்ளார்.

செல்வராகவன் பேசியதாவது

“யாரோ ஒருவர் எதையாவது உளறிவிட்டு நான் தான் ஆன்மீக குரு என்று சொன்னால் நீங்களும் போர்வை எல்லாம் எடுத்துக்கொண்டு அவர் பேசுவதை கேட்க கிளம்பிவிடுவீர்களா?

உண்மையான குருவை நீங்கள் தேடிப் போக வேண்டாம். அவரே உங்களைத் தேடி வருவார். அந்த சந்திப்பு தானாக நடக்கும்.

தொலைக்காட்சியில் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்பவர் ஆன்மீக குரு கிடையாது. உண்மையான குரு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே மாட்டார்.

தியானம்தான் இந்த உலகத்திலேயே சுலபமான விஷயம். உலகத்தில் இருக்கும் எல்லா மதமும் போதிப்பது கடவுள் நமக்குள் இருக்கிறார் என்பது தான். மிகவும் எளிமையானது புத்தர் சொல்லும் வழிதான்.

நீங்கள் மூச்சு வெளியே செல்லும் இடத்தில் மட்டுமே உங்கள் நினைப்பை வைக்க வேண்டும். வேறு எந்த சிந்தனை வந்தாலும் அதை தவிர்க்க முயற்சி செய்யாதீர்கள். இதை தொடர்ந்து செய்யும்போது தேவையில்லாத சிந்தனைகள் எல்லாம் நின்றுவிடும் . இதை தான் புத்தர் சொல்கிறார். ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்யும்போது அது தன்னால் நடந்துவிடும். இதற்கு உலகத்தில் யாராவது மாற்றுக்கருத்து சொல்வதாக இருந்தால் சொல்லுங்கள். ஆனால் இதற்கு மாற்று கருத்தே கிடையாது”.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.