சினிமா

சமந்தா விவாகரத்து குறித்த கருத்து: வருத்தம் தெரிவித்த அமைச்சர் கொண்டா சுரேகா!

யோகேஷ் குமார்

சமந்தா விவாகரத்து குறித்த கருத்துக்கு அமைச்சர் கொண்டா சுரேகா வருத்தம் தெரிவித்துள்ளார்.

சமந்தா - நாக சைதன்யாவின் பிரிவுக்கு தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி. ராமாராவ்தான் காரணம் என்று கொண்டா சுரேகா தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இந்த கருத்துக்கு சமந்தா, நாக சைதன்யா, நாகார்ஜுனா உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சமந்தா, “ஒரு அமைச்சராக உங்களின் கருத்துகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே, ஒருவரின் தனிப்பட்ட வாழ்கைக்கு மதிப்பளிக்குமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய விவாகரத்து என்பது என்னுடைய தனிப்பட்ட விஷயம், அது குறித்த அவதூறுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பரஸ்பர சம்மதத்துடனே என்னுடைய விவாகரத்து இருந்தது. அதில் எந்த அரசியல் தலையீடுகளும் இல்லை. என்னுடைய பெயரை அரசியல் பிரச்னைகளில் பயன்படுத்த வேண்டாம்” என்று தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து நாகார்ஜுனா, “அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்துகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் எதிரிகளை விமர்சிக்க, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா பிரபலங்களின் வாழ்க்கையைப் பயன்படுத்தாதீர்கள்.

மற்றவர்களின் தனியுரிமையை மதிக்க வேண்டும். ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள், எங்கள் குடும்பத்திற்கு எதிராக சொன்ன கருத்துக்கள் முற்றிலும் தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நாக சைதன்யா, “விவாகரத்து என்பது ஒருவர் வாழ்கையில் எடுக்கப்படும் மிகவும் வேதனையான முடிவுகளில் ஒன்று. பல யோசனைகளுக்குப் பிறகு, நானும் எனது முன்னாள் மனைவியும் பிரிய வேண்டும் என பரஸ்பர முடிவு செய்தோம். அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, அமைச்சர் சுரேகா தனது கருத்தை திரும்பப் பெற்று, மன்னிப்பு கேட்க வேண்டும் என கே.டி. ராமாராவ் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில் சமந்தா விவாகரத்து குறித்த கருத்துக்கு அமைச்சர் கொண்டா சுரேகா வருத்தம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கொண்டா சுரேகா கூறியதாவது: “பெண்களை இழிவுபடுத்தும் ஒரு தலைவரின் அணுகுமுறை குறித்தே கேள்வி எழுப்பினேனே தவிர, உங்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் அவற்றை கேட்கவில்லை”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.