நடிகர் ரோபோ சங்கர் காலமான நிலையில், வரும் செப்டம்பர் 20 அன்று அவர் பெயரனுக்குக் காதணி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (செப்.18) இரவு காலமானார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 46.
இந்நிலையில், வரும் செப்டம்பர் 20 அன்று அவரது பெயரனுக்குக் காதணி விழா ஏற்பாடு ஆகியிருந்த அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. மதுரையைப் பூர்வீகமாக கொண்ட ரோபோ சங்கரின் பெயரனுக்கு உசிலம்பட்டியில் உள்ள மானுத்து கிராமத்தில் உள்ள பெத்தன சுவாமி திருக்கோவிலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் அழைப்பிதழில்,
”கிழக்குச்சீமையிலே மானுத்து மந்தையிலே கேள்விப்பட்டிருப்பீர்கள், மானுத்து சீமையில்!! பெத்தன சுவாமி திருக்கோவிலில் நடைபெறுகிறது. பாரம்பரியம் பேசும் பொற்கணத்தில், எங்கள் குட்டியின் காது குத்தும் விழா... உங்கள் வருகையால் நிறைவு பெறும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அண்மையில் இந்தக் காதணி விழாவை முன்னிட்டு அவரது மகள் இந்த்ரஜா காணொளிகளை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இரு நாள்களில் பெயரனுக்குக் காதணி விழா இருந்த நிலையில் ரோபோ சங்கர் மறைந்ததால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.