சினிமா

ரோபோ சங்கர் சொன்ன கடைசி வார்த்தை: அண்ணன் சிவராமன் உருக்கம் | Robo Sankar |

ரோபோ சங்கர்தான் வீட்டில் கடைசி செல்லக்குட்டி. அவன் என்னை அப்பா என்ற நிலையில்தான் பார்த்தான் என்றும் பேச்சு...

கிழக்கு நியூஸ்

ரோபோ சங்கர் சொன்ன கடைசி வார்த்தைகளை அவரது அண்ணன் சிவராமன் வருத்தத்துடன் வெளியிட்டுள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (செப்.18) இரவு காலமானார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் ரோபோ சங்கரின் மூத்த அண்ணன் சிவகாசி சிவா என்கிற சிவராமன் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது -

“ரோபோ சங்கர்தான் வீட்டில் கடைசி செல்லக்குட்டி. அவனுக்கு ஆறு ஏழு வயது இருக்கும்போதே எங்கள் தந்தை இறந்துவிட்டார். இதனால் அவன் அப்பாவின் முகத்தையே பார்த்தது கிடையாது. அவனுக்கு அப்பா என்றால் என்னையும் எங்கள் இன்னொரு சகோதரரையுமே பார்ப்பாம். அவன் என்னை அப்பா என்ற நிலையில்தான் பார்த்தான். நான் ஒரு சொல் சொன்னால் அந்த அழுத்தத்தில் அப்படியே நிற்பான். குடும்பம், நட்பு, உறவு அவனை அழைத்துவிட்டால் எந்த வேலையாக இருந்தாலும் போட்டுவிட்டுச் சென்றுவிடுவான். அவன் அவ்வளவு பொறுப்பானவன்.

அவன் பாடி பில்டர். நன்றாக உடற்பயிற்சி செய்வான். அதை ஒரு நடனமாக அவன் மேடைகளில் செய்ய நினைத்தான். அதற்காக அலுமினியம் பெயின் ட்டைப் பூசிக் கொள்வான். இரவு 2 மணிக்கு நிகழ்ச்சியில் மேடை ஏற, 11 மணிக்கே பூசிக் கொள்ள வேண்டும். அதை எடுக்கவும் ஒரு மணி நேரம் ஆகும். இதுவரை 1000 மேடை பார்த்திருப்பான். மேடையில் ரோபோ போல் அவன் நடித்ததே அவனுக்கு அடைமொழியாக அமைந்தது. அதன் பின் மிமிக்ரி செய்யத் தொடங்கினான்.

ஒரு கட்டத்தில் அவனை அறியாமலேயே மயக்கம் அடைந்தான். பின் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கே நன்றாகத்தான் இருந்தான். கடைசியாக எனக்கு ஒரு மாதிரி ரொம்ப சோர்வாக இருக்கிறது. தூக்கம் வருது. நான் தூங்கணும் என்று சொன்னான். அதுதான் அவன் கடைசியாகப் பேசியது” இவ்வாறு பேசினார்.