நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகியப் படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஆர்.ஜே. பாலாஜி, சூர்யாவின் 45-வது படத்தைத் தனியாக இயக்கவுள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை.
இது குறித்து சமீபத்தில் நடிகரும் இயக்குநருமான சித்ரா லட்சுமணன் அவரது யூடியூப் சேனலில் பேசுகையில், “ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவிடம் கதையைச் சொன்ன உடனே, சூர்யாவுக்கு அக்கதை பிடித்ததாகவும், வருகிற நவம்பரில் படப்பிடிப்பை தொடங்கலாம் என்றும் சூர்யா தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் பாலாஜி ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்துள்ளார். ஒரு மணி நேரம் கதையை கேட்ட பிறகு ரஹ்மானுக்கும் அக்கதைப் பிடித்திருக்கிறது. படத்தில் பணியாற்ற சம்மதமும் தெரிவித்துள்ளார்.
சூர்யாவுடனான படம் குறித்து என்னிடம் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்று தெரிவித்திருந்தார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44-வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் சூர்யாவின் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.