சினிமா

காந்தாரா படம் பார்க்கும் முன் அசைவம் சாப்பிடக்கூடாது?: சர்ச்சை போஸ்டருக்கு ரிஷப் ஷெட்டி விளக்கம் | Rishab Shetty |

படம் பார்க்கப் போகும் முன் மது அருந்தக் கூடாது, புகை பிடிக்கக் கூடாது, அசைவம் சாப்பிடக் கூடாது என்று வெளியான போஸ்டரால் பரபரப்பு...

கிழக்கு நியூஸ்

காந்தாரா சாப்டர் 1 படம் பார்ப்பதற்கு முன் அசைவம் சாப்பிடக் கூடாது என்று வெளியான போலி போஸ்டர் விவகாரத்திற்கு இயக்குநர் ரிஷப் ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்கும் காந்தாரா சாப்டர் 1 படம், வரும் அக்டோபர் 2 அன்று வெளியாகிறது. இதன் டிரெய்லர் நேற்று (செப்.22) வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. மேலும் படக்குழு பல்வேறு இடங்களில் விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 'காந்தாரா சேப்டர் 1’ படத்தைப் பார்க்க மது அருந்தக் கூடாது, புகை பிடிக்கக் கூடாது, அசைவம் உண்ணக் கூடாது என படக்குழு அறிவுறுத்தியது போல் போஸ்டர் ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. இது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவது போல் அமைந்ததாக கருத்துகள் எழுந்த நிலையில் விமர்சனம் எழுந்தது.

இதையடுத்து, சர்ச்சை போஸ்டர் குறித்து படத்தின் இயக்குநரும் கதாநாயருமான ரிஷப் ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். பெங்களூருவில் படத்திற்கான விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அவரிடம் இந்த போஸ்டர் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விளக்கமளித்தார்.

”போலி போஸ்டரைக் கண்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். உடனே அதை தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுப்பி, இதுபற்றி விசாரிக்கச் சொன்னேன். அவர்கள் சமூக ஊடகங்களில் எதிர்வினை ஆற்றுவதற்கு முன்பே, வர்கள் அந்தப் பதிவை நீக்கிவிட்டு, மன்னிப்பும் கோரியுள்ளனர். என்ன நடக்கிறது என்றால், ஒரு படம் வெளியாகும்போது அது பேசும் பொருளுக்கு இணையான தங்கள் கருத்துகளையும் சிலர் அதனோடு சேர்த்து வெளியிட்டு விடுகிறார்கள். இவர்கள் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதைச் செய்கிறார்கள். உணவு என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். அதில் விதிமுறைகளை விதிக்க யாருக்கும் உரிமை கிடையாது. வெளியான போலி போஸ்டருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” என்று தெரிவித்தார்.