படம்: https://x.com/iam_RaviMohan
சினிமா

வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன்: ரவி மோகன்

3 BHK படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

கிழக்கு நியூஸ்

பிறந்ததிலிருந்து சொந்த வீட்டில் வசித்து வந்தாலும், தற்போது வாடகை வீட்டிலேயே வசித்து வருவதாக நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.

8 தோட்டாக்கள் புகழ் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி நடித்துள்ள படம் 3 BHK. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இயக்குநர் ராம், நடிகர் ரவி மோகன் உள்ளிட்டோர் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படத்தைப் பாராட்டி பேசினார்கள்.

3 BHK படத்துடன் தன்னைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்ததாகப் பேசிய ரவி மோகன், தான் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருவதாகக் கூறினார்.

ரவி மோகன் பேசியதாவது:

"என் வாழ்க்கையில் நான் வாடகை வீட்டில் இருந்ததே இல்லை. நான் பிறந்ததிலிருந்து எப்போதுமே சொந்த வீடு தான். இப்போது வாடகை வீட்டில் வசிக்கிறேன். எனவே, என்னால் பலவற்றைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது.

இந்தப் படம் எனக்குப் பெரிய உந்துதலாக இருந்தது. என் வாழ்க்கையை மீண்டும் வாழ்ந்தது போல இருந்தது. வாழ்க்கையை நல்லபடியாக வாழப் போகிறேன் என்று தோன்றியது. ஒரு படம் இந்த உந்துதலைக் கொடுத்தாலே போதும். அதை 3 BHK கொடுத்திருக்கிறது" என்றார் ரவி மோகன்.