புஷ்பா 2 சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்றபோது ஹைதராபாத் திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில், வழக்கைத் திரும்பப் பெறப்போவதாகப் பெண்ணின் கணவர் அறிவித்துள்ளார்.
புஷ்பா முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா 2 படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. டிசம்பர் 4 அன்று இந்தப் படம் வெளியானது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியை ரசிகர்களுடன் காண அல்லு அர்ஜுன் ஹைதராபாதிலுள்ள சந்தியா திரையரங்குக்கு வருகை தந்திருந்தார்.
அப்போது ஏராளமான ரசிகர்கள் திரையரங்கில் கூடினார். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இவருடைய மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
புஷ்பா 2 படக் குழுவினர் திரையரங்குக்கு வருவது குறித்து காவல் துறையினரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, சந்தியா திரையரங்கு நிர்வாகம், அல்லு அர்ஜுன் மற்றும் அவருடையப் பாதுகாப்புக் குழுவினர் மீது சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் அல்லு அர்ஜுன் இன்று கைது செய்யப்பட்டார். இவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவற்றுக்கு மத்தியில் தான் கொடுத்த புகாரைத் திரும்பப் பெறப் போவதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் பாஸ்கர் கூறியுள்ளார்.
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
"என் மகன் படம் பார்க்க வேண்டும் என விரும்பியதால் நாங்கள் தான் அன்றைய நாள் சந்தியா திரையரங்குக்குச் சென்றோம். அல்லு அர்ஜுன் அன்றைய நாள் திரையரங்குக்கு வந்தது அவருடையத் தவறல்ல. என்னுடைய வழக்கைத் திரும்பப் பெற நான் தயார். அவரைக் கைது செய்வது குறித்து காவல் துறையினர் என்னிடம் தெரிவிக்கவில்லை. மருத்துவமனையில் இருந்தபோது, செய்திகளில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். கூட்டநெரிசலுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்றார் அவர்.