படம்: https://x.com/iYogiBabu
சினிமா

யோகி பாபுவை இயக்கும் ரவி மோகன்! | Ravi Mohan

ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அடுத்த இரு ஆண்டுகளில் 10 படங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக ரவி மோகன் அறிவித்தார்.

கிழக்கு நியூஸ்

இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகர் ரவி மோகன், முதல் படத்தில் யோகி பாபுவை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

நடிகர் ரவி மோகன் கடந்த ஜூன் மாதம் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கவுள்ளதாக அறிவித்தார். இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் அதிகாரபூர்வ அறிவிப்பு அதே மாதத்தில் வெளியானது.

ரவி மோகன் ஸ்டுடியோஸின் முதல் படத்தை டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்குகிறார் என்ற அறிவிப்பு ஜூன் 9 அன்று வெளியானது. ப்ரோ கோட் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரவி மோகன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், தனது தயாரிப்பு நிறுவனத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளார் ரவி மோகன். சென்னையில் நடைபெற்ற ரவி மோகன் ஸ்டுடியோஸ் தொடக்க விழாவில் சிவகார்த்திகேயன், கார்த்தி, ஷிவராஜ்குமார், ஜெனிலியா, ரிதேஷ் தேஷ்முக், எஸ்ஜே சூர்யா, அதர்வா முரளி, மணிகண்டன், ரவி மோகனின் சகோதரர் மோகன் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அடுத்த இரு ஆண்டுகளில் 10 படங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக ரவி மோகன் அறிவித்தார். முதல் படமாக ப்ரோ கோட் உருவாகிறது.

மற்றொரு படத்தை யோகி பாபுவை வைத்து ரவி மோகனே இயக்குகிறார். ரவி மோகன் இயக்கும் முதல் படம் இது. இப்படத்துக்கு 'அன் ஆர்டினரி மேன்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கோமாளி படத்தின்போதே, யோகி பாபுவை நாயகனாக வைத்து படம் இயக்குவேன் என ரவி மோகன் வாக்குறுதியளித்திருக்கிறார். இதைத் தற்போது அவருடைய சொந்த தயாரிப்பாகவே உருவாக்கி வருகிறார் ரவி மோகன். ப்ரோ கோட் மற்றும் அன் ஆர்டினரி மேன் படங்களின் பூஜை இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பலரையும் வாழ்த்து வரவேற்றுப் பேசிய ரவி மோகன், கடவுள் தனக்கு தந்த பரிசாக கெனிஷாவைக் குறிப்பிட்டார்.

Ravi Mohan | Ravi Mohan Studios | Yogi Babu | Bro Code | An Ordinary Man | Kenisha