ரஞ்சித் 
சினிமா

நான் சாதி வெறியன் தான்: நடிகர் ரஞ்சித்

“சுயமரியாதை திருமணங்களை நிறுத்த வேண்டும்”.

யோகேஷ் குமார்

சமூக நீதி பற்றி யாரும் பேசினால் எனக்கு கோபம் வரும் என ரஞ்சித் பேசியுள்ளார்.

ரஞ்சித் இயக்கி நடித்துள்ள படம் ‘கவுண்டம்பாளையம்’. இப்படம் ஜுலை 5 அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் கோவையில் நடைபெற்ற ஒரு கோயில் விழாவில் கலந்து கொண்ட ரஞ்சித் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

ரஞ்சித் பேசியதாவது:

“சுயமரியாதை திருமணம் என்று சொல்லி நெல்லையில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். சுயமரியாதை திருமணங்களை நிறுத்த வேண்டும். சமூக நீதி பற்றி பேசினால் எனக்கு கடும் கோபம் வரும். கஷ்டப்பட்டு பெற்றோர்கள் வளர்த்த பிள்ளையை யாரோ ஒருவர் தூக்கிச்சென்று திருமணம் செய்வதுதான் சமூக நீதியா? சமூக நீதி குறித்து பேசுபவர்கள் முதலில் அவர்களின் குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணிற்கு சமூக நீதி திருமணம் செய்து வைத்துவிட்டு மற்ற பெண்களை பற்றி யோசிக்கலாம். சாதி பிரிவினையை ஏற்படுத்ததான் இதெல்லாம் நடக்கிறது.

பெற்றோர்கள் கையெழுத்து இல்லாமல் எந்தவொரு திருமணமும் நடக்கக் கூடாது. அப்படி ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். பெற்றவர்கள்தான் உயர்ந்த சாதி. பெற்றவர்களிடம் இருந்து பிரித்து கல்யாணம் நடத்தி வைப்பதற்கு பதிலாக அவர்களை சேர்த்து வைத்து அவர்களின் சம்மதத்துடன் நடத்தி வைக்கலாமே.

‘கவுண்டம்பாளையம்’ என்ற பெயருக்கு பிரச்னை எழுந்தது. அது சாதி பெயர் கிடையாது. நாடகக் காதல் என்று நான் சொன்னால் என்னை சாதி வெறியன் என்று சொல்கிறார்கள். நாடகக் காதலை எதிர்பதால் என்னை அப்படி சொன்னால், ஆமாம் நான் சாதி வெறியன் தான்” என்றார்.