நெல்சன் இயக்கத்தில் இணையும் ரஜினி - கமல் 
சினிமா

நெல்சன் இயக்கத்தில் இணையும் ரஜினி - கமல் | Rajinikanth | Kamal Haasan | Nelson Dilipkumar |

படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது...

கிழக்கு நியூஸ்

நெல்சன் இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் காணொளி வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

தமிழ் திரையுலகின் இரு பெரும் நட்சத்திரங்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் இணைந்து பணியாற்ற உள்ளதாக சமீபத்தில் அறிவித்தனர். ஏற்கெனவே நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

தலைவர் 173

இதைத் தொடர்ந்து, தலைவர் 173 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தைக் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இதனை இயக்குநர் சுந்தர் சி இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியான நிலையில் அவர் திடீரென்று அதிலிருந்து வெளியானார். அதன்பின் ஜனவரி 3 அன்று அப்படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது.

கமலுடன் மீண்டும் இணையும் ரஜினி

இதற்கிடையில், ரஜினியுடன் இணைந்து நடிப்பதற்காகவும் நல்ல கதையைத் தேடிக் கொண்டிருப்பதாக கமல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். தமிழ்த் திரையுலகின் இரு பெரும் சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இது தொடர்பான முன்னோட்டக் காட்சி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கமல் - ரஜினி இணைந்த படங்கள்

இயக்குநர் கே. பாலசந்தர் மூலம் கதாநாயகனாக அறிமுகமான கமல், ரஜினி இருவரும் ஏற்கெனவே சில படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். 1975-ல் அபூர்வ ராகங்கள், 1976-ல் தெலுங்கு படமான அந்துலேனி கதா, 1976-ல் மூன்று முடிச்சு, 1977-ல் அவர்கள், 1977-ல் பதினாறு வயதினிலே, 1977-ல் ஆடு புலி ஆட்டம், 1978-ல் இளமை ஊஞ்சலாடுகிறது, 1978-ல் தெலுங்கு படமான வயசு பிலிச்சிந்தி, 1978-ல் தப்புத் தாளங்கள், 1978-ல் அவள் அப்படித்தான், 1979-ல் அலாவுதீனும் அற்புத விளக்கும், 1979-ல் நினைத்தாலே இனிக்கும், 1979-ல் தாயில்லாமல் நானில்லை, 1983-ல் உருவங்கள் மாறலாம், 1985-ல் இந்தி படமான ஜெராஃப்தார் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். மேலும், 1980-ல் நட்சத்திரம், 1981-ல் தில்லு முல்லு ஆகிய படங்களில் கௌரவத் தோற்றங்களில் வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்தப் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இப்படம் அடுத்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Red Giant movies released promo of the new film directed by Nelson, starring Kamal Haasan and Rajinikanth