ராயன் விமர்சனம் 
சினிமா

இயக்குநர் தனுஷ் சாதித்தாரா?: ‘ராயன்’ பட விமர்சனம்

யோகேஷ் குமார்

தனுஷின் 50-வது படம் ராயன். இயக்கியுள்ள 2-வது படம்.

சிறுவயதில் தனது பெற்றோர்களைத் தொலைத்த தனுஷ், இரண்டு தம்பிகள் மற்றும் கைக் குழந்தையாக இருக்கும் தங்கையுடன் சென்னைக்கு வருகிறார். எந்த பிரச்னையிலும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற கொள்கையுடன் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

அண்ணன் என்ன சொன்னாலும் கேட்பேன் என்று ஒரு தம்பியும், என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று மற்றொரு தம்பியும், இவர்களுக்கு மத்தியில் தனது தனிப்பட்ட பிரச்னைகளுடன் ஒரு தங்கையும் என வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் வசிக்கும் இடத்தில் இரண்டு பெரிய ரெளடிகள். யதார்த்தமாக ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்ள அதிலிருந்து மீண்டு வர தனுஷ் என்ன செய்தார், தனுஷின் குடும்பம் அவருக்கு எந்தளவுக்கு ஒத்துழைப்பு அளித்தது, தனுஷ் எதிர்கொண்ட பிரச்னையின் முடிவு என்ன என்பதுதான் ராயன்.

இப்படத்தில் பெரிய நடிகர்கள் பட்டாளம் இருந்தாலும், அனைவரின் கதாபாத்திரங்களுக்கும் சரிசமமான முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது தனுஷின் எழுத்து.

தேவையான இடங்களில் சரியான இசையை அளித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். ‘உசுரே நீதானே’ என்கிற பாடல் மயக்குகிறது.

“என்னுடைய கதாபாத்திரம் பிடிக்காமல் போனால் பெரிய நடிகர்களின் படங்களையும் நிராகரிப்பேன்” என்று ஒரு நேர்காணலில் துஷாரா விஜயன் சொன்னது வெறும் பேச்சல்ல என்று நிரூபணமாகியிருக்கிறது. தேர்ந்த நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தின் கலை இயக்குநர் ஜாக்கியைப் பாராட்டியே ஆக வேண்டும். வடசென்னையை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ராயனின் இள வயது கிராமத்து வீடு, குடிசைப்பகுதி, கிளைமாக்ஸ் பாடல் காட்சியின் பிரமாண்ட அரங்கம் என்று பல பகுதிகளில் கலை இயக்குநரின் கைவண்ணம். ஓம் பிரகாஷின் பிரமாதமான ஒளிப்பதிவு காட்சிகளுக்குப் பொருத்தமாக உள்ளது.

முதல் பாதி சற்று மெதுவாக சென்றாலும், இடைவேளை காட்சி சிறப்பாக அமைந்துள்ளது. 2-வது பாதியில் சில காட்சிகள் ஏன், எதற்கு என்கிற கேள்வியை எழுப்புகிறது.

நடிப்பில் வழக்கம்போல முத்திரை பதித்தாலும் இந்தக் கதையை தனுஷ் ஏன் எடுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. ரெளடிகளைப் பின்புலமாகக் கொண்ட வன்முறைக் காட்சிகள் கொண்ட இன்னொரு படத்தை இயக்குவதற்கு தனுஷ் எதற்கு?