விமர்சகர்கள் தங்களின் கருத்துக்களை அனைவரின் கருத்தாக மக்களிடம் கொண்டு செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்த அறிக்கை:
“திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் அது திரைப்படத்தை பற்றி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகன் மீது தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவர்கள் மீது இருக்கும் வன்மத்தை பொதுவெளியில் கக்க ஒரு கருவியாக, திரைப்பட விமர்சனத்தை சில ஊடகங்கள் சமீப காலங்களில் பயன்படுத்தி வருவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
திரைத்துறை விமர்சகர்கள் தராசு போல ஒரு திரைப்படத்தின் நிறை குறைகளை சொல்லி, மொத்தத்தில் தங்களின் அபிப்பிராயத்தை சொல்லலாமே தவிர, அதை ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் விதத்தில் கடுமையாக விமர்சனம் செய்து, தனிமனித தாக்குதல்களும் செய்வது, திரைப்பட துறையை மொத்தமாக அழிக்கும் செயலாக நமது சங்கம் கருதுகிறது. அவ்வாறு செய்து வரும் ஊடகவியலாளர்கள் மீது தனது கண்டனத்தை நமது சங்கம் தெரிவிக்கிறது.
ஒரு திரைப்படத்தை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். விமர்சகர்கள் தங்களின் கருத்துக்களை அனைவரின் கருத்தாக மக்களிடம் கொண்டு செல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு திரைப்படத்தை மூன்று மணி நேரம் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்காமல், அது ஏதோ மொத்த சமுதாயத்திற்கும் அநீதி விளைவித்தது போல பலர் பேசி வருவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று கருதுகிறோம்.
விமர்சகர்களுக்கு திரைப்படங்களை விமர்சனம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால் தனிப்பட்ட காழ்புணர்ச்சியின் காரணமாக ஒரு திரைப்படத்தை பற்றிய வெறுப்பை ஊடங்களில் விதைக்க கூடாது என்பதை அனைத்து ஊடகவியலாளர்களும் மனதில் வைத்து திரைப்பட விமர்சனங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இந்த 2024 வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு Public Review/Talk மூலம் பெருமளவில் பாதிப்பை யூடியூப் சேனல்கள் ஏற்படுத்தியுள்ளன. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த யூடியூப் சேனல்களும் எடுக்க தடை செய்து, இந்த FDFS Public Review/Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்”.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.