ஞானவேல் ராஜா  
சினிமா

நல்லவேளை அக்.10-ல கங்குவா வெளியாகலை: ஞானவேல் ராஜா நிம்மதி!

“கடவுள்தான் இந்த நேரத்தில் படத்தை வெளியிட வேண்டாம் என முடிவு செய்ததாக நாங்கள் நினைக்கிறோம்”

யோகேஷ் குமார்

கங்குவா வெளியீட்டுத் தேதியை மாற்றியதற்கான காரணத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படம் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உட்பட பலரும் நடிக்கும் படம் கங்குவா. இசை - தேவி ஸ்ரீ பிரசாத். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

முன்னதாக, இப்படம் அக்டோபர் 10-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ‘மெய்யழகன்’ இசை வெளியீட்டு விழாவில், “மூத்தவருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் அக்டோபர் 10 அன்று வேட்டையன் படம் வெளியாவதே சரியாக இருக்கும்” என்று சூர்யா பேசியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த அக்.10 அன்று ரஜினியின் வேட்டையன் படம் மட்டும் வெளியானது.

இந்நிலையில் கங்குவா படத்தின் வெளியீடு குறித்து அப்படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா கலாட்டா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “கங்குவா படத்தைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகள், விளம்பரங்கள் என அனைத்தும் சாதகமாக அமையும் வகையில் சரியான நேரத்தில் வெளியாக வேண்டும் என்று முடிவு செய்துதான் அக்.10-ல் வெளியாகும் என்று அறிவித்தோம். அந்த நேரத்தில் மழை இருக்குமா என்பதெல்லம் கேட்டறிந்த பிறகு தான் அந்த தேதியை முடிவு செய்தோம்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதே தினத்தில் வேட்டையன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே ஒரு சரியான சமயத்தில் படத்தை வெளியிட வேண்டும் என்பதால் வெளியீட்டு தேதியை மாற்றினோம். இதில் போட்டி எல்லாம் ஒன்றுமில்லை. ஆனால், தற்சமயத்தில் நிறைய இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. எனவே, கடவுள்தான் இந்த நேரத்தில் படத்தை வெளியிட வேண்டாம் என முடிவு செய்ததாக நாங்கள் நினைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.