சினிமா

தீபாவளி வெளியீடு: டியூட் படத்துக்கு வழிவிட்ட எல்ஐகே படக்குழு! | Dude | LIK |

எல்ஐகே படம் டிசம்பர் 18 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்துக்கு வழிவிடுவதாக எல்ஐகே படக் குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பிரதீப் ரங்கநாதனுக்கு இரு படங்கள் வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றன. அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் படத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் நடித்துள்ளார். இரு படங்களும் தீபாவளிக்கு வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஒரு கதாநாயகன் நடித்த இருவேறு படங்கள் ஒரே நாளில் வெளியானால் அது வியாபார ரீதியாக சிக்கலை உண்டாக்கும். எனவே, இரு படங்களில் ஏதேனும் ஒரு படம் தீபாவளிக்கான போட்டியிலிருந்து பின்வாங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதன்படி, டியூட் படத்துக்கு வழிவிடுவதாக எல்ஐகே படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இரண்டு ரயில்கள் ஒரே பாதையில், எதிரெதிர் திசையில் வேகமாகப் பாய்ந்து வந்தால், அது பேராபத்தில் தான் முடியும்.

எனவே, அதைத் தவிர்க்கும் பொருட்டு, மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் இளம் இயக்குநர் கீர்த்திஸ்வரன் அறிமுகமாகும் 'டியூட்' படத்துக்கு வழிவிட நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

எங்கள் ஹீரோ பிரதீப் ரங்கநாதனுக்கு இந்தத் தீபாவளி மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைய வாழ்த்துகிறோம்.

எங்கள் படத்துக்கு வழிவிட்டு வேறொரு தேதியில் 'டியூட்' படத்தை வெளியிடச் சொல்லி மைத்ரி மூவிஸ் நிறுவனத்திடம் பலமுறை வேண்டுகோள் வைத்தும் அது பலனளிக்கவில்லை.

மேலும், தற்போது திரைப்படத் துறை மற்றும் திரையரங்குகள் எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டு, இரண்டு படங்களின் வசூலுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என நாங்கள் விரும்புகிறோம்.

எனவே, அன்பின் அடையாளமாக எங்களது திரைப்படத்தை 2025 டிசம்பர் 18 அன்று வியாழக்கிழமை அன்று வெளியிட முடிவு செய்துள்ளோம்.

எங்கள் டீசருக்கு கொடுத்த மாபெரும் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கிறோம். இதே ஆர்வத்துடன் படம் வெளியாகும் வரை காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

வரும் வாரங்களில் படம் குறித்த பல புதிய அப்டேட்கள், பாடல்கள் உங்களைத் தேடி வரவிருக்கின்றன" என்று படக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pradeep Ranganathan | Dude | LIK | Diwali Release |