சினிமா

அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடிகர் பிரபு நலமுடன் உள்ளார்: மருத்துவமனை நிர்வாகம்

அவரது மூளையில் உள்ள ரத்தத் தமனி ஒன்றில் வீக்கம் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

ராம் அப்பண்ணசாமி

மூளையில் நடந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடிகர் பிரபு நலமுடன் உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் இளைய மகனான நடிகர் பிரபு கணேசன், காய்ச்சல் மற்றும் தலைவலி காரணமாக, சில நாட்களுக்கு  முன்பு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே ஹார்ட் இன்ஸ்டியூட் என்கிற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்த மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையின்போது, அவரது மூளையில் உள்ள ரத்தத் தமனி ஒன்றில் வீக்கம் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாகத் தகவல் தெரிவித்துள்ள மருத்துவமனையின் நிர்வாகத் தலைவர் டாக்டர் பழனியப்பன், `பரிசோதனையின்போது, பெரும்பான்மையான மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கியத் தமனிகளில் ஒன்றான உள் கரோடிட் தமனியின் (internal carotid artery) மேல் பகுதியில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது’ என்றார்.

இதைத் தொடர்ந்து பிரபுவிற்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்தபிறகு, பிரபுவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (ஜன.5) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, அவர் இல்லத்திற்குத் திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.