சினிமா

டெல்லி கணேஷ்: காலத்தால் அழியாத கலைஞன்!

பசி திரைப்படத்தில் முனியாண்டி என்ற ரிக்‌ஷா ஓட்டுனர் கதாபாத்திரத்தில் நடித்த டெல்லி கணேஷுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.

ராம் அப்பண்ணசாமி

80 வயதான பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் தூக்கத்திலேயே மரணமடைந்ததாக அவரது மகன் மஹா டெல்லி கணேஷ் இன்று (நவ.10) காலை அறிவித்தார். சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள டெல்லி கணேஷின் உடலுக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1 ஆகஸ்ட் 1944-ல் திருநெல்வேலியில் பிறந்த டெல்லி கணேஷின் இயற்பெயர் கணேசன். 1964-ல் இந்திய விமானப் படையில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார் டெல்லி கணேஷ். நடிப்பு மீது இருந்த அதீத ஆர்வத்தால் 1974-ல் விமானப்படை பணியை அவர் ராஜினாமா செய்தார்.

அதன்பிறகு அப்போது தலைநகர் தில்லியில் செயல்பட்டு வந்த டெல்லி தட்சிண பாரத நாடக சபாவில் இணைந்து நடிப்புப் பயிற்சியை அவர் தொடங்கினார். கணேசனுக்கு டெல்லி கணேஷ் எனப் பெயர் மாற்றம் செய்தார் இயக்குநர் கே. பாலச்சந்தர். அவரது `பட்டின பிரவேசம்’ படத்தில் 1976-ல் அறிமுகமானார் டெல்லி கணேஷ்.

குணச்சித்திரக் கதாபாத்திரங்களுக்குப் பேர் போன டெல்லி கணேஷ் ஒட்டுமொத்தமாக சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், குறும்படங்கள், தொலைக்காட்சி நெடுத்தொடர்கள், வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். தமிழ் மொழியைத் தாண்டி மலையாளம், தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

கமல்ஹாசனின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட டெல்லி கணேஷ், அவரது மைக்கேல் மதன காமராஜன், நாயகன், புன்னகை மன்னன், ஹே ராம், அபூர்வ சகோதரர்கள், சத்யா, காதலா காதலா, அவ்வை சண்முகி, தெனாலி, பாபநாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக வெளியான கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்திலும் அவர் நடித்திருந்தார்.

இது தொடர்பாக 2021-ல் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிற்கு அளித்த பேட்டியில், கமல்ஹாசனுடன் வரிசையாக நடித்த படங்கள் தனக்குப் பெயரையும், புகழையும் வாங்கித் தந்ததாகக் நினைவுகூர்ந்தார் டெல்லி கணேஷ். மேலும், `சக நடிகர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களின் திறமையை வெளிப்படுத்த நிறைய இடமளிப்பார் கமல்ஹாசன்’ எனவும் அந்தப் பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2015-ல் ஒம் கணேஷ் கிரியேஷன்ஸ் என்ற பெயரிலான தன் நாடக கம்பெனியை, தயாரிப்பு நிறுவனமாக மாற்றினார் டெல்லி கணேஷ். தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக, தன் மகன் மஹாவை வைத்து, என்னுள் ஆயிரம் என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார்.

1979-ல் துரையின் இயக்கத்தில் வெளியான பசி திரைப்படத்தில் முனியாண்டி என்ற ரிக்‌ஷா ஓட்டுனர் கதாபாத்திரத்தில் நடித்த டெல்லி கணேஷுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது. அத்துடன் கடந்த 1994-ல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார் டெல்லி கணேஷ்.

சிந்து பைரவி படத்தின் குரூமூர்த்தி கதாபாத்திரம், விஜயின் தமிழன் படத்தின் வழக்கறிஞர் லட்சுமி நாராயணன் கதாபாத்திரம், சரத்குமாரின் அரசு படத்தின் நீலகண்ட சாஸ்திரி கதாபாத்திரம், சில நிமிடங்களே தோன்றியிருந்தாலும் அயன் படத்தில் வரும் போதை தடுப்பு அலுவலர் கதாபாத்திரம் போன்றவற்றால் எத்தனை வருடங்கள் கடந்தாலும் தமிழ் ரசிகர்கள் நினைவில் டெல்லி கணேஷ் என்றும் இருப்பார்.