மகாராஜா படத்தை இயக்கிய இயக்குநர் நித்திலன் சாமிநாதன் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
2017-ல் வெளியான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன் சாமிநாதன். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யப், பாரதிராஜா, நட்டி நட்ராஜ், மம்தா மோகன் தாஸ், அபிராமி, சிங்கம்புலி உட்பட பலரும் நடித்த படம் ‘மகாராஜா’.
இப்படம் கடந்த ஜூன் 14 அன்று வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
சமீபத்தில் இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
ஓடிடி-யில் வெளியான முதல் இரண்டு நாட்களில் இப்படம் 3.2 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது.
இந்நிலையில் இன்று படம் வெளியாகி 50 நாள் ஆன நிலையில், நித்திலன் சாமிநாதன் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. கோலிவுட்டின் தங்க கரங்களிடமிருந்து அனுபவம், புரிதல் என வாழ்க்கை குறித்த நாவலைப் படித்தது போல இருந்தது.
மகாராஜா படம் உங்களுக்கு எவ்வளவு பிடித்தது என்பது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. உங்கள் விருந்தோம்பல் மற்றும் பணிவை கண்டு நான் வியப்படைகிறேன். நீடூழி வாழ்க தலைவா” என்று பதிவிட்டுள்ளார்.