சினிமா

தேசிய திரைப்பட விருதுகள் விழா: தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் | National Film Awards |

சிறந்த நடிகர் - ஷாருக் கான், விக்ராந்த் மாஸே, நடிகை - ராணி முகர்ஜி, துணை நடிகர் - எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி ஆகியோருக்கு விருது...

கிழக்கு நியூஸ்

இந்திய திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மலையாள நடிகர் மோகன்லால் பெற்றுக் கொண்டார்.

இந்தியாவின் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் இன்று நடைபெற்றது. இதில் 2023-க்கான தேசிய திரைப்பட விருதுகளைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினர்.

இவ்விழாவில் இந்திய அளவில் திரைத்துறையின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது, மலையாள திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையில், நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது. மோகன்லால் இதுவரை 5 தேசிய விருதுகள் மற்றும் மாநில அரசின் 9 விருதுகளை பெற்றுள்ளார். இவற்றுடன் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளையும் மத்திய அரசு வழங்கி சிறப்பு செய்துள்ளது. இந்நிலையில், 2023 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அவருக்கு வழங்கப்பட்டது.

அவ்விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஜி.வி. பிரகாஷ் குமார் பெற்றார். தெலுங்கு பட இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில், தனுஷ், சம்யுக்தா ஆகியோர் நடித்த வாத்தி படத்திற்கு இசையமைத்ததற்காக இவ்விருதை அவர் பெற்றார். சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து இது அவருக்கு 2-வது தேசிய விருதாகும்.

அதேபோல் சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக் கான் மற்றும் விக்ராந்த் மாஸே ஆகியோர் பெற்றனர். அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்த ஜவான் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அவரது 33 ஆண்டு கால திரைப்பயணத்தில் முதன்முறை தேசிய விருதைப் பெற்றார். அதேபோல் விது வினோத் சோப்ரா இயக்கத்தில் உருவான 12த் பெயில் படத்திற்காக சிறந்த நடிகர் விருதை விக்ராந்த் மாஸே பெற்றார்.

சிறந்த துணை நடிகருக்கான விருதை தமிழுக்காக எம்.எஸ். பாஸ்கரும், மலையாளத்துக்காக ஊர்வசியும் பெற்றனர். பார்க்கிங் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் விருதை எம்.எஸ்.பாஸ்கர் பெற்றார். மலையாள சினிமாவின் கிறிஸ்டோ டாமி இயக்கத்தில் உள்ளொழுக்கு படத்தில் நடித்ததற்காக ஊர்வசி சிறந்த துணை நடிகர் விருதைப் பெற்றார்.

சிறந்த நடிகைக்கான விருது மிர்சஸ் சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே படத்துக்காக ராணி முகர்ஜிக்கு வழங்கப்பட்டது. ஆசிமா சிப்பர் இயக்கத்தில் நார்வேயில் நடந்த உண்மைக் கதையை மையாக வைத்து எடுக்கப்பட்ட படத்திற்காக ராணி முகர்ஜி இவ்விருதைப் பெற்றார்.

சிறந்த துணை நடிகருக்காக எம்.எஸ். பாஸ்கர் விருது பெற்ற பார்க்கிங் படம், மேலும் 2 விருதுகளை வென்றது. சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருதைப் பார்க்கிங் படம் வென்றது. அவ்விருதைப் படத்தின் தயாரிப்பாளர் சினிஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த திரைக்கதைக்கான விருதை, படத்தின் இயக்குனர் ராம்குமார் பால கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.