திரையரங்க வளாகங்களில் படம் வெளியான முதல் மூன்று நாள்களுக்கு ரசிகர்களிடம் விமர்சனங்கள் கேட்க வேண்டாம் என விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.
கிழக்குச் சீமையிலே, பசும்பொன் படங்களில் நடித்தவர் விக்னேஷ். இவர் தற்போது நடித்துள்ள படம் ரெட் ஃபிளவர் (Red Flower). 56 படங்களில் நடித்துள்ள இவர், முதன்முறையாக ஹீரோ மற்றும் வில்லன் என இரு கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விஷால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அப்போது, தயாரிப்பாளர்கள் சார்பில் அவ்வப்போது தெரிவிக்கப்படும், திரையரங்க வளாகத்தில் ரசிகர்களிடம் விமர்சனங்களைக் கேட்பதை அனுமதிக்கக் கூடாது என்ற கருத்தை விஷால் முன்வைத்தார்.
"தயாரிப்பாளர்கள் சங்கம் சார்ந்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நடிகர் சங்கம் சார்ந்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகி கதிரேசன் இருக்கிறார். அவர் சார்பாக பத்திரிகையாளர்கள், யூடியூபர்களுக்கு ஒரு விண்ணப்பம் வைக்கிறேன். கமலா திரையரங்க உரிமையாளர் உள்பட மற்ற திரையரங்க உரிமையாளர்களுக்கும் விண்ணப்பம் வைக்கிறேன்.
இனி வரும் படங்கள் வெள்ளிக்கிழமை வெளியாகும்போது, 3 நாள்களுக்கு மட்டும் 12 காட்சிகளுக்கு மட்டும் திரையரங்க வளாகத்துக்குள் விமர்சனங்களைக் கேட்க வேண்டாம். முதல் மூன்று நாள்களுக்கு மட்டும் தயவு செய்து திரையரங்க வளாகத்துக்கு வெளியே அவரவர் வாகனங்களை நிறுத்துமிடங்களில் விமர்சனத்தைக் கேட்டுக்கொள்ளலாம். விமர்சனங்களைக் கேட்க வேண்டாம் என்று சொல்லவில்லை. திரையரங்க வளாகத்துக்கு வெளியே விமர்சனங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். 3 நாள்களுக்கு மட்டும் திரையரங்க வளாகத்துக்குள் விமர்சனங்களை எடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்.
நீங்களே டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்று படம் பார்த்துவிட்டு மைக்கை நீட்டிக்கொண்டு உங்களுடைய கருத்தைச் சொல்லிவிடுங்கள். பிறகு மக்களுடைய கருத்தைக் கூறினால் நன்றாக இருக்கும். எந்தப் படமாக இருந்தாலும், அது நன்றாக இருக்கும். கண்டிப்பாக விமர்சனம் வேண்டும். ஆனால், முதல் 12 காட்சிகளை விட்டுவிடலாம்" என்று விஷால் பேசினார்.
Vishal | Actor Vishal | Movie Reviews | Cinema Reviews | Theatre Reviews | Red Flower Audio Launch