சினிமா

தமிழ்த் திரையுலகில் தொடரும் விவாகரத்துகள்!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக ரஹ்மானும், அவருடைய மனைவி சாய்ரா பானுவும் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

யோகேஷ் குமார்

சமீபகாலமாக ஜெயம் ரவி, ஜிவி பிரகாஷ், தனுஷ், இமான், ஏ.ஆர். ரஹ்மான் என மணமுறிவை நோக்கிச் செல்லும் கோலிவுட் பிரபலங்களின் பட்டியல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக ரஹ்மானும், அவருடைய மனைவி சாய்ரா பானுவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

ஏ.ஆர். ரஹ்மான், சாய்ரா பானுவுக்கு 1995-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா என இரு மகள்களும் அமீன் என்ற மகனும் உள்ளார்கள்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவித்தார். ஜெயம் ரவி. இவர்களுடைய திருமணம் 2009 ஜூன் 4-ல் காதல் திருமணமாக நடைபெற்றது. இவர்களுக்கு ஆரவ், அயான் என இரு மகன்கள்.

எனினும் விவாகரத்து குறித்து ஜெயம் ரவி தனிச்சையாக முடிவு எடுத்ததாக ஆர்த்தி ரவி பதில் அறிக்கை வெளியிட்டார். பாடகியும் மனநல ஆலோசகருமான கெனிஷா என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக ஜெயம் ரவி தனது திருமணப் பந்தத்திலிருந்து விலகியதாக வதந்திகள் பரவின. இதனால் பரபரப்பும் சர்ச்சையும் ஏற்பட்டது. எனக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே காதல் என்பது ஊடகங்களின் கற்பனைகள். எங்களுடைய எல்லைகளை இருவரும் அறிவோம் என்று ஒரு பேட்டியில் இந்த வதந்தியை மறுத்த கெனிஷா, ஆர்த்தி மற்றும் அவருடைய பெற்றோருடன் ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட போராட்டம் குறித்துக் கேட்பது வலி மிகுந்தது. அதுபோன்ற இழிவை யாரும் எதிர்கொள்ளக் கூடாது என்று பரபரப்பான முறையில் பேட்டியளித்தார்.

கடந்த மே மாதத்தில், தங்களுடைய 11 வருட திருமண உறவு முடிந்துவிட்டதாகப் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும், பாடகி சைந்தவியும் அறிவித்தார்கள். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. பள்ளிக் காலத்திலிருந்து காதலர்களாக இருந்து வந்த ஜிவி பிரகாஷ், சைந்தவி இடையே பிரிவு ஏற்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த 2022 ஜனவரியில் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினி ஆகிய இருவரும் மணமுறிவை அறிவித்தார்கள். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளார்கள்.

தனுஷ் - ஐஸ்வர்யா, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். இந்த விவாகரத்து வழக்கு தொடர்பாக இருவரும் இன்று வரை நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது.

2021 டிசம்பரில் இசையமைப்பாளர் இமான் - மோனிகா பிரிந்து வாழ முடிவு செய்தார்கள். இதன் பிறகு 2022 மே மாதத்தில், பிரபல கலை இயக்குநர் உபால்டுவின் மகள் எமிலியை இமான் திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் வரிசையில் தற்போது ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளியை சரிசெய்ய முடியவில்லை என்று காரணம் சொல்லப்பட்டுள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் எந்தவொரு சர்ச்சைக்கும் இடம் தராத ஏ.ஆர். ரஹ்மான் தொடர்புடைய இச்செய்தியை ரசிகர்களால் இன்னமும் நம்பமுடியவில்லை.

பிரபல நட்சத்திரங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்துகொள்வது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் பல கேள்விகளையும் உண்டாக்கியுள்ளது. பிரபலங்களின் மண வாழ்க்கை சிக்கலின்றி நீடிப்பது அவ்வளவு எளிதாக இல்லை என்பதையே சமீபகால விவாகரத்து அறிவிப்புகள் உணர்த்துகின்றன.