சினிமா

மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது! | Mohanlal |

செப்டம்பர் 23, 2025-ல் நடைபெறும் 71-வது தேசிய விருதுகள் விழாவில் மோகன்லாலுக்கு விருது வழங்கப்படவுள்ளது.

கிழக்கு நியூஸ்

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியத் திரைத் துறையில் மிக உயரிய விருது தாதாசாகேப் பால்கே விருது. தமிழ்த் திரையுலகிலிருந்து சிவாஜி கணேசன், கே. பாலச்சந்தர், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் தாதாசாகேப் விருது வென்றுள்ளார்கள். லதா மங்கேஷ்கர், அமிதாப் பச்சன் ஆகியோரும் இவ்விருதை வென்றுள்ளார்கள். கடந்தாண்டு மிதுன் சக்ரவர்த்தி தாதாசாகேப் விருதை வென்றார்.

இதுதொடர்பாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின்படி, 2023-ம் ஆண்டுக்கான மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருது மோகன்லாலுக்கு வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

மோகன்லாலின் அற்புதமான திரைப் பயணம் தலைமுறைகளைக் கடந்து ஈர்த்துள்ளது. இந்திய சினிமாவுக்காக ஆற்றிய மகத்தான பங்களிப்புக்காக ஜாம்பவான் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான மோகன்லால் கௌரவிக்கப்படுகிறார். செப்டம்பர் 23, 2025-ல் நடைபெறும் 71-வது தேசிய விருதுகள் விழாவில் மோகன்லாலுக்கு விருது வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1978 முதல் மலையாளத் திரையுலகில் நடித்து வரும் மோகன்லால் 5 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். 2001-ல் பத்மஸ்ரீ மற்றும் 2019-ல் பத்மபூஷன் விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்தது. தமிழில் இருவர், ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் மோகன்லால்.

Mohanlal | Dadasaheb Phalke Award |