ANI
சினிமா

எம்புரான் பட சர்ச்சை: மன்னிப்பு கேட்ட மோகன்லால்!

என்னுடைய படங்கள் எந்தவொரு அரசியல் இயக்கத்துக்கும், கருத்தியலுக்கும், மதத்திற்கும் எதிராக வெறுப்பை உண்டாக்காமல் பார்த்துக்கொள்வது ஒரு கலைஞனாக என்னுடைய கடமையாகும்

ராம் அப்பண்ணசாமி

எம்புரான் படக் காட்சிகளை முன்வைத்து எழுந்த சர்ச்சைகளுக்காக ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரி தன் எக்ஸ் கணக்கில் மோகன்லால் பதிவிட்டுள்ளார்.

மோகன்லால், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரது நடிப்பில், பிரித்விராஜ் இயக்கிய எம்புரான் படம் கடந்த 27 அன்று வெளியானது. இந்த படத்தில் 2002 குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், நாட்டின் விசாரணை அமைப்புகளை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.  

இந்நிலையில், எம்புரான் சர்ச்சைகள் தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் மோகன்லால் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,

`லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல், சமூகக் காட்சிகள் என்னை விரும்பும் பல ரசிகர்களின் மனதைப் புண்படுத்தியிருப்பதை அறிந்தேன். என்னுடைய படங்கள் எந்தவொரு அரசியல் இயக்கத்துக்கும், கருத்தியலுக்கும், மதத்திற்கும் எதிராக வெறுப்பை உண்டாக்காமல் பார்த்துக்கொள்வது ஒரு கலைஞனாக என்னுடைய கடமையாகும்.

படத்திற்காக உழைத்த அனைவருக்கும் பொறுப்பு இருப்பதை உணர்ந்துகொண்டு, இதற்காக நானும் எம்புரான் படக்குழுவினரும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படத்திலிருந்து கட்டாயமாக நீக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

கடந்த நான்கு தசாப்தங்களாக உங்களில் ஒருவராகவே எனது திரைப்பட வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். உங்களின் அன்பும், நம்பிக்கையுமே என்னுடைய பலமாகும். அதைவிட மோகன்லால் ஒன்றும் பெரிய ஆள் இல்லை’ என்றார்.