ஏ.ஆர். ரஹ்மான் 
சினிமா

எந்திரன் படத்தில் மைக்கேல் ஜாக்சன் பாட வேண்டியது..: ஏ.ஆர். ரஹ்மான்

"துரதிஷ்டவசமாக 2009-ல் அவர் மறைந்தார்".

யோகேஷ் குமார்

எந்திரன் படத்தில் மைக்கேல் ஜாக்சன் பாட வேண்டியதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஏ. ஆர். ரஹ்மான் மைக்கேல் ஜாக்சனை சந்தித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

ரஹ்மான் பேசியதாவது:

“2009-ல் நான் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த போது மைக்கேல் ஜாக்சனை சந்திக்க வேண்டும் என்று கூறி அவரது உதவியாளரை பார்த்தேன். அவரும் மின்னஞ்சல் அனுப்புவதாக சொன்னார். ஆனால், அடுத்த ஒரு வாரத்துக்கு எந்த பதிலும் இல்லை. இதன் பிறகு ஆஸ்கருக்கு எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

அதன் பிறகு மைக்கேல் ஜாக்சனை சந்திக்கும்படி மின்னஞ்சல் வந்தது. நான் ஆஸ்கர் விருது வென்றால் அவரை சந்திக்கிறேன் என்று பதிலளித்தேன். ஆஸ்கர் விருதை வெல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அடுத்த நாள் அவரைச் சந்தித்தேன். இரண்டு மணி நேரம் அவருடன் பேசினேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் அது.

இதன் பிறகு இந்தியாவுக்கு திரும்பினேன். அச்சமயத்தில் எந்திரன் படத்தின் வேலைகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, “நீங்களும் மைக்கேல் ஜாக்சனும் இணைந்து ஒரு பாடலில் பணியாற்றலாமே” என்று ஷங்கர் என்னிடம் சொன்னார். இது குறித்து நான் மைக்கேல் ஜாக்சனிடம் பேசினேன். எதுவாக இருந்தாலும் நாம் இணைந்தே பணியாற்றலாம் என்றார். ஆனால், துரதிஷ்டவசமாக 2009-ல் அவர் மறைந்தார்” என்றார்.