சினிமா

ஆங்கிலத் தலைப்பு ஏன்?: மாரி செல்வராஜ் கேட்ட மன்னிப்பு | Mari Selvaraj |

துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் படம் நாளை வெளியாகிறது...

கிழக்கு நியூஸ்

பைசன் படத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இப்படம் நாளை (அக். 17) வெளியாகிறது. இந்நிலையில், சென்னையில் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பைசன் படத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருக்கிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மாரி செல்வராஜ், “மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் திரைக்கதை எழுதியபோது படத்தின் பெயர் காளமாடன் என்றுதான் வைத்திருந்தேன். திரைக்கதைப் புத்தகத்தில் காளமாடன் என்றுதான் இருக்கிறது.

ஆனால், தயாரிப்பு நிறுவனம் பல்வேறு மொழிகளுக்கு இப்படத்தைக் கொண்டு போக வேண்டும் என்று விரும்பினார்கள். ஒடிடியிலும் வெளியாகவுள்ளதால் ஒரு புதிய பெயர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார்கள். பல்வேறு விவாதங்கள் நடந்தன. அதன் பிறகு பைசன் என்ற பெயர் முடிவானது. ஆனால் நான் காளமாடன் என்ற பெயரைக் கீழே போடுவேன் என்று சொல்லிவிட்டேன். அதனால் படத்தின் பெயர் பைசன் காளமாடன் என்று ஆகிவிட்டது. விற்பனை நோக்கம் மட்டுமல்ல, பல மொழிகளுக்கும் நமது கலாசாரம் சார்ந்த படம் செல்வது பெருமைதானே.

காளமாடன் என்ற பெயரைத் தெலுங்கில் என்னவாக மொழிபெயர்ப்பார்கள் என்று தெரியாது. ஹிந்தியில் என்னவாக ஆகும் என்று தெரியாது. என் படம் எல்லாம் மொழிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது என்பது எனக்கு மகிழ்ச்சி தானே. வேறு ஏதோ பெயர் பயன்படுத்துவதை விட பைசன் என்ற பெயர் அடையாளமாக மாறும் என நினைக்கிறேன்” என்றார்.