மலையாளத் திரைத் துறைக்கு 2024-ல் ரூ. 650 கோடி முதல் ரூ. 700 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்த் திரைத் துறையில் எந்தவொரு படம் தோல்வியடைந்தாலும், உடனடியாக வரும் விமர்சனம் மலையாளப் படங்களைப்போல தமிழில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்பது தான். ஆனால், நாம் பாராட்டிக் கொண்டாடும் மலையாளத் திரைத் துறைக்கு 2024-ல் ரூ. 650 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கேரள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.
2024-ல் வெளியான மொத்தப் படங்களில் 26 படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக கேரள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன.
கேரள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஏ ராகேஷ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
"199 புதிய படங்கள் உள்பட 204 படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டன. இதற்காக திரைத் துறை ரூ. 1,000 கோடி செலவிட்டது. ஆனால், 26 படங்கள் மட்டும் திரையரங்குகளிலிருந்து ரூ. 300 முதல் ரூ. 350 கோடி வரை லாபம் ஈர்த்தன. இந்த ஆண்டு திரைத் துறைக்கு ரூ. 650 கோடி முதல் ரூ. 700 கோடி வரை நஷ்டம் என்பதை இந்தத் தரவுகள் குறிப்பிடுகின்றன. நடிகர்கள் உள்பட சம்பந்தப்பட்ட அனைவரும் நிதி விஷயத்தில் மிகக் கடுமையாக ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்" என்றார் அவர்.
ஓடிடி மூலம் கிடைத்த வருவாய் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில், "திரையரங்குகளில் கிடைக்கும் வசூலைப் பொறுத்தே பெரும்பாலான ஓடிடி தளங்கள் படங்களை வாங்குகின்றன. எனவே, நிறைய படங்களால் ஓடிடி தளத்தைச் சென்றடைய முடியவில்லை" என்றார் அவர்.
படத்தை எடுப்பதற்கான செலவு குறைக்கப்பட வேண்டும், நடிகர்களின் சம்பள உயர்வு தயாரிப்பாளர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது போன்ற கருத்துகள் கேரள திரைத் துறையைச் சேர்ந்த தயாரிப்பாளர்களின் குரலாக உள்ளது.