போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் அண்மையில் இரு சர்ச்சைகளில் சிக்கினார். படப்பிடிப்புத் தளத்தில் தவறாக நடந்துகொண்டதாக நடிகை ஒருவர் இவர் மீது புகார் எழுப்பினார். மேலும், கொச்சியில் விடுதியொன்றில் தங்கியிருந்த ஷைன் டாம் சாக்கோ, போதைப் பொருள் தடுப்புப் பிரவு நடத்திய சோதனையின்போது அங்கிருந்து தப்பியோடினார். இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஷைன் டாம் சாக்கோவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதன் அடிப்படையில் எர்ணாகுளம் டௌன் வடக்கு காவல் நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆஜரானார் சாக்கோ. இவரிடம் காவல் துறையினர் 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது விடுதியிலிருந்து தப்பியோடியது ஏன் என்று விசாரித்ததற்கு, தன்னைத் தாக்க யாரோ வந்ததாக நினைத்தே அங்கிருந்து தப்பியோடியதாகப் பதிலளித்துள்ளார். மேலும், போதைப் பொருள் உட்கொண்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
இதனிடையே, ஷைன் டாம் சாக்கோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போதைப் பொருள் உட்கொண்டது, ஆதாரங்களை அழித்தது மற்றும் குற்றம் புரிந்தவரைப் பாதுகாப்பதற்காக தவறான தகவலைத் தந்தது ஆகிய குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டன. 4 மணி நேர விசாரணையைத் தொடர்ந்து, ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடைய அலைபேசி அழைப்பு விவரங்கள், வாட்ஸ் அப் குறுஞ்செய்தி விவரங்கள் உள்ளிட்ட விவரங்களைக் காவல் துறையினர் சேகரித்துள்ளார்கள்.
அண்மையில் தான் 2015-ல் பதிவான போதைப்பொருள் வழக்கு ஒன்றிலிருந்து ஷைன் டாம் சாக்கோ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.