விஜய் சேதுபதி 
சினிமா

என் படத்தைப் பாக்க கூச்சப்படுவேன்: விஜய் சேதுபதி

இனி விஜய் சேதுபதிக்கு எதற்கு பேனர் என ஒருசிலர்...

யோகேஷ் குமார்

விஜய் சேதுபதியின் 50-வது படமான ‘மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், தனது முந்தையப் படங்கள் சரியாக அமையவில்லை என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

2017-ல் வெளியான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன் சாமிநாதன். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யப், பாரதிராஜா, நட்டி நட்ராஜ், மம்தா மோகன் தாஸ், அபிராமி, சிங்கம்புலி உட்பட பலரும் நடித்த படம் ‘மகாராஜா’.

இப்படம் பத்திரிகையாளர்களுக்கான காட்சி திரையிடப்பட்டதில் இருந்தே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய விஜய் சேதுபதி, “இப்படத்தின் கதையை கேட்கும் போது மிகப்பெரிய பிரமிப்பு இருந்தது. இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி ஒவ்வொரு படம் தொடங்குவதற்கு முன்பும் இருக்கும். இப்படம் சராசரியாக அல்லது சராசரிக்கும் அதிகமாக இருக்கும், செலவு செய்த பணம் வசூலாகும் என்ற நம்பிக்கை இருந்தது.

என்னுடைய முந்தையப் படங்கள் சரியாக அமையவில்லை. விஜய் சேதுபதிக்கு பேனர் வைத்தால் மட்டும் கூட்டமா வரப்போகிறது என ஒருசிலர் கேட்டதாக என் நண்பர் என்னிடம் சொன்னார். ஆனால் அதற்கு பதிலளிக்கும் நோக்கத்தில் இப்படத்தில் நடிக்கவில்லை.

பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி, படம் வெளியாவதற்கு முந்தைய நாளில் இருந்தே நல்ல வரவேற்பைக் கொடுத்தீர்கள். பொதுவாக நான் நடித்ததை நான் பார்க்கமாட்டேன், என் படத்தைப் பாக்கவே கூச்சப்படுவேன். ஆனால், நீங்கள் எழுதியப் பிறகு ஒரு சில காட்சிகளை நான் மீண்டும் பார்த்தேன்” என்றார்.