பராசக்தி படத்தை வெளியிடத் தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் 
சினிமா

பராசக்தி படத்தை வெளியிடத் தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் | Parasakthi |

சிறுகதையையும் படத்தின் திரைக்கதையும் ஒப்பிட்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு...

கிழக்கு நியூஸ்

சிவகார்த்திகேயனின் அடுத்த படமான ‘பராசக்தி’ படத்தை வெளியிடத் தடை விதிக்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பராசக்தி. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இது ஜனவரி 10 அன்று வெளியாகிறது. இதற்கிடையில், இணை இயக்குநர் ராஜேந்திரன் என்பவர், பராசக்தி படம் தனது செம்மொழி என்ற கதையை திருடி எடுக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி, அதனால் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனுதாரர் தரப்பு வாதம்

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து, செம்மொழி என்ற பெயரில் கதையாக எழுதி, 2010-ல் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்தக் கதையை பயன்படுத்தி பராசக்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் கதாசிரியர் எனப் பட இயக்குநர் சுதா கொங்குரா பெயரை பயன்படுத்தவும், படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

கதைக்கும் திரைக்கதைக்கும் தொடர்பில்லை

இதைத் தொடர்ந்து, இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், அரவிந்த் பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர், “பராசக்தி படத்தின் கதையை 2020-ல் இயக்குநர் பதிவு செய்திருக்கிறார். மனுதாரரின் செம்மொழி பட கதைக்கும், பராசக்தி பட கதைக்கும் திரைக்கதைக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. படத்தின் கதையைத் திருடி இருப்பதாக கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள படத்துக்குத் தடை விதித்தால் பெருத்த இழப்பு ஏற்படும்” என வாதிட்டனர்.

படத்தை வெளியிடத் தடையில்லை

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “பராசக்தி படம் தயாரிப்பு குறித்து 2024-லேயே தகவல் தெரிந்தும் 2025 டிசம்பரில்தான் மனுதாரர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதனால் படத்தை வெளியிடத் தடை விதிக்க முடியாது” என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கதையை ஆய்வு செய்ய உத்தரவு

மேலும், பராசக்தி படத்தின் கதையையும் செம்மொழி கதையையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்தும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் அறிக்கையை இதுவரை தாக்கல் செய்யவில்லை என்பதால் அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு உத்தரவிட்டு, பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 28-க்கு ஒத்தி வைத்தார்.

The Madras High Court has refused to order a ban on the release of Sivakarthikeyan's next film, 'Parasakthi'.