சினிமா

ப்ரோ கோட் பெயரை ரவி மோகன் பயன்படுத்தலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு | Bro Code |

தில்லி மதுபான உற்பத்தி நிறுவனம் விடுத்த எச்சரிக்கைக்கு எதிரான வழக்கில் அனுமதி...

கிழக்கு நியூஸ்

நடிகர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் படத்திற்கு ப்ரோ கோட் என்ற பெயர் வைப்பதைத் தடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிக்கிலோனா பட இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ப்ரோ கோட். இப்படத்தை ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இதன் டீசர் கடந்த ஆகஸ்ட் 27 அன்று வெளியானது. படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் தில்லியைச் சேர்ந்த மதுபான நிறுவனம் ஒன்று, ப்ரோ கோட் என்ற பெயருக்குத் தங்கள் நிறுவனம் பதிப்புரிமை பெற்றுள்ளதால், அப்பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று ரவி மோகன் ஸ்டூடியோஸுக்கு மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை அனுப்பியது.

இதை எதிர்த்து ரவி மோகன் ஸ்டூடியோஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ப்ரோ கோட் என்ற சினிமா தலைப்பு எந்த விதத்திலும் மதுபானம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் வணிகச் சின்ன உரிமைகளை மீறவில்லை என்றும், இந்தப் பெயரைப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமி நாராயணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ப்ரோ கோட் என்ற பெயரைப் பதிவு செய்ய தில்லி மதுபான உற்பத்தி நிறுவனம் அளித்த விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில் தான் உள்ளது. இப்படத்திற்கும் அந்த நிறுவனத்தின் மதுபாணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ரவி மோகன் ஸ்டூடியோஸ் தரப்பு வழக்கறிஞர் கார்த்திகை பாலன் வாதாடினார்.

அவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் திரைப்படத்துக்கு ப்ரோ கோட் பெயரை பயன்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என உத்தரவிட்டார்.