சினிமா

ஹலோ.. சாய் பல்லவியா?: சென்னை மாணவருக்கு குவியும் போன்கால்கள்!

திரையில் தோன்றிய தொலைபேசி எண்ணை, சாய் பல்லவியின் தொலைபேசி எண் என நினைத்து..

யோகேஷ் குமார்

அமரன் படத்தில் தோன்றிய தொலைபேசி எண்ணை சாய் பல்லவியின் உண்மையான தொலைபேசி எண் என நினைத்து, பலரும் அந்த எண்ணுக்கு போன் செய்து வருவது பேசுபொருளாக மாறியுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்பட பலர் நடித்த படம் ‘அமரன்’. இசை - ஜி.வி. பிரகாஷ் குமார்.

இந்திய நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். இப்படம் அக்.31 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் ஒரு காட்சியில் சாய் பல்லவி தன் தொலைபேசி எண்ணை எழுதி சிவகார்த்திகேயனிடம் கொடுப்பார். திரையில் தோன்றிய அந்த எண் சென்னையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவரின் எண் என தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து பலரும் அது சாய் பல்லவியின் எண் என நினைத்து அந்த மாணவருக்கு போன் செய்தது பேசுபொருளாக மாறியுள்ளது.

இது தொடர்பாக அந்த மாணவர், “இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்தும் நிறைய பேர் அழைக்கிறார்கள். தீபாவளி அன்று இரவு போனை மியூட் செய்துவிட்டேன். அடுத்த நாள் காலையில் 100-க்கும் மேற்பட்ட மிஸ்டு கால் இருந்தது. இது தொடர்பாக சிவகார்த்திகேயன், படத்தின் இயக்குநர் ஆகியோரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் எந்த பதிலும் வரவில்லை. இதனால் போனை சைலண்டில் போட்டுவிட்டேன். எனவே, முக்கியாமான கால் எதையும் மிஸ் செய்துவிடுவேனா என்று பயமாக இருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக இதே எண்ணை தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனவே அதனை இழக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இது சம்மந்தமாக குறிப்பிட்ட தொலைபேசி நிறுவனத்திடம் பேசியும், இதற்கான தீர்வு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.