மலையாள சினிமாவில் ரூ. 300 கோடியைத் தொடும் முதல் படமாக லோகா சாப்டர் 1 மாறியுள்ளது.
நடிகர் துல்கர் சல்மானின் வேபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், டொமினிக் அருண் இயக்கத்தில், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான படம் லோகா சாப்டர் 1. உலகம் முழுவதிலும் ஆகஸ்ட் 28 -ல் வெளியான இப்படம், முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வந்தது. அசாத்திய சக்திகளைக் கொண்ட சூப்பர் ஹீரோ நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தது அதிக கவனம் பெற்றது. ஆக்ஷன் காட்சிகளும் பின்னணி இசையும் பாராட்டப்பட்டன.
சுமார் ரூ. 30 கோடி செலவில் இப்படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் உலக அளவில் மொத்தம் ரூ. 300 கோடி வசூலை லோகா சாப்டர் 1 படம் எட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கேரளாவில் மட்டும் ரூ. 120 கோடி வசூலாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கேரள திரையுலகிலேயே முதன்முறையாக ரூ. 300 கோடி வசூலைப் பெற்ற படமாக லோகா மாறியுள்ளது.
முன்னதாக, மோகன்லால் நடித்த எல் 2: எம்புரான் ரூ. 268 கோடி வசூலை எட்டியது. தமிழ்நாட்டில் அதிக வரவேற்பைப் பெற்ற மஞ்ஞுமெல் பாய்ஸ் ரூ. 242.30 கோடியைப் பெற்றது. மோகன்லாலின் துடரும் ரூ. 235 கோடி வசூலித்தது. டொவினோ தாமஸின் 2018 ரூ. 177 கோடி வசூலைப் பெற்றது.
இதுகுறித்து மம்முட்டி கம்பெனி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
”கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த படமாக லோகா ஆகியுள்ளது. இந்தத் தருணத்தை ஒவ்வொரு திரையிலும், ஒவ்வொரு டிக்கெட் மூலமும் சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி. எங்களுடன் சேர்ந்து வரலாறு படைத்த கேரள ரசிகர்களுக்கும் நன்றி” என்று பதிவிடப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27 அன்று, படக்குழு அடுத்த பாகத்தின் போஸ்டரையும் 3 நிமிட முன்னோட்டக் காட்சியையும் வெளியிட்டு லோகா சாப்டர் 2 படத்திற்கான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ள நிலையில், பாக்ஸ் ஆபீஸ் வசூல் அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.