அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், சட்டம் அனைவருக்கும் சமம் என்றார்.
புஷ்பா 2 வெளியீட்டின்போது ஹைதராபாதில் சிறப்புக் காட்சியைப் பார்க்க அல்லு அர்ஜுன் திரையரங்கத்துக்குச் சென்றிருந்தார். அப்போது, கூட்டநெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தெலங்கானாவையும் உலுக்கி எடுத்தது. இதுதொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் இடைக்காலப் பிணையில் வெளியே வந்தார்.
அல்லு அர்ஜுன் மனிநேயம் இல்லாமல் நடந்துகொண்டதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் காட்டமாகக் குற்றம்சாட்டினார். இதற்கு அல்லு அர்ஜுன் மறுப்பும் தெரிவித்திருந்தார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தெலங்கானாவில் சிறப்புக் காட்சிகள், டிக்கெட் விலை உயர்வு உள்ளிட்டவற்றுக்கு தெலங்கானா அரசு தடை விதித்தது.
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதன்முறையாக மௌனம் கலைத்த பவன் கல்யாண் கூறியதாவது:
"சட்டம் அனைவருக்கும் சமம். இது மாதிரியான சம்பவங்களில் நான் காவல் துறையினரைக் குறை கூற மாட்டேன். அவர்கள் பொதுமக்கள் பாதுகாப்பை மனதில் கொண்டு செயல்படுவார்கள். பிரச்னைகள் குறித்து திரையரங்க நிர்வாகம் சார்பில் அல்லு அர்ஜுனிடம் முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டும். அவசியம் எனில், உடனடியாக அல்லு அர்ஜுனை அங்கிருந்து புறப்படச் சொல்லியிருக்க வேண்டும்.
அல்லு அர்ஜுன் சார்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சென்று யாராவது சந்தித்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். இந்தச் சம்பவத்தில் ரேவதியின் மரணம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியளித்தது. ஏற்கெனவே இழப்பாக இருந்த ஒன்றை இவர்கள் பெரும் துயரமாக மாற்றிவிட்டார்கள். குடும்பத்தினருக்குத் துணை நிற்பதாக முன்கூட்டியே அவர்களிடத்தில் தெரிவித்திருக்க வேண்டும்.
இந்தச் சம்பவத்துக்கு நேரடி காரணமாக இல்லாமல் இருந்தாலும், தவறுக்கான வருத்தத்தை உணர்ந்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மனிதநேயம் வெளிப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அனைவரும் ரேவதியின் இல்லத்துக்குச் சென்றிருக்க வேண்டும். இதுவே மக்களின் கோபத்துக்குக் காரணம்.
இந்தச் சம்பவத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதன் வேதனையை அல்லு அர்ஜுனும் உணர்ந்துள்ளார்" என்றார் பவன் கல்யாண்.
அல்லு அர்ஜுனும் பவன் கல்யாணும் இயல்பில் உறவினர்கள். அல்லு அர்ஜுனின் அத்தை சுரேகா, பவன் கல்யாணின் மூத்த சகோதரர் சிரஞ்சீவியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.