சினிமா

நான் சர்வதேச கைக்கூலி அல்ல, தினக்கூலி!: கேபிஒய் பாலா | KPY Bala |

இரவு பகலாக உழைத்து நான் சம்பாதிப்பதிக்கும் பணத்தில்தான் எல்லாம் செய்கிறேன் என்றும் பேச்சு...

கிழக்கு நியூஸ்

நடிகர் பாலாவையும் அவர் செய்து வரும் உதவிகளையும் விமர்சித்து சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் காணொளிகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில்,

”யார் இந்த கேபிஒய் பாலா? அவர் ஒரு சர்வதேச கைக்கூலி. மோசடிக்காரர். இப்படி பல காணொளிகள் என்னைப் பற்றி வருகின்றன. நான் கொடுத்த ஆம்புலன்ஸின் நெம்பர் பிளேட்டில் சின்ன எழுத்துப் பிரச்னை. அதை உடனே சரி செய்து விட்டோம். அதனால் எவ்வளவு நன்மை நடந்திருக்கிறது என்பதை யாரும் போடுவதில்லை. ஒரு சின்ன எழுத்துப் பிரச்னையை வைத்துக் கொண்டு, பாலாவின் முகத்திரை கிழிந்தது என்று யூடியூப்பில் பேசுகிறார்கள். அதில் ஒருவர் நான் சர்வதேச கைக்கூலி என்கிறார். ஐயா நான் தினக்கூலி. பாலா எப்படி மருத்துவமனை கட்டுகிறார்? அவருக்கு எங்கிருந்து பணம் வந்தது என்று கேட்கிறார்கள். நான் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கிறேன். படம் நடிக்கிறேன். விளம்பரங்களில் நடிக்கிறேன். வெளிநாட்டில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். எனக்கு யாரோ வெளிநாட்டிலிருந்து பணம் தருவதாக எல்லாம் சொல்கிறார்கள். இந்தக் காலத்தில் அப்படி யார் பணம் கொடுப்பார்கள். என்னிடம் ஒரு அறக்கட்டளை கிடையாது. மக்களிடமிருந்து நிதி திரட்டும் பணிகள் ஏதும் நான் செய்யவில்லை. நான் இரவு பகலாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் தான் எல்லாம் செய்கிறேன்.

மருத்துவமனை கட்ட அவ்வளவு பணம் எப்படி வந்தது என்கிறார்கள். நான் வீடு கட்ட வேண்டிய கால் கிரவுண்டு நிலத்தில், பின்னால் அமுதவாணனிடம் இருந்து இன்னொரு கால் கிரவுண்டு நிலம் வாங்கி, சிறிய கிளினிக் ஒன்று கட்டுகிறேன். நான் மட்டும் ஒன்றரை கோடி ரூபாயில் சொகுசு காரும் அடுக்குமாடி வீடும் கட்டியிருந்தால் எந்த பிரச்னையும் வந்திருக்காது என்று சிலர் சொல்கிறார்கள். அடுக்கு மாடி வீட்டுக்குப் பதிலாக நான் மருத்துவமனை கட்டுகிறேன். சொகுசு காருக்குப் பதிலாக நான் ஆம்புலன்ஸ் வாங்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு இவ்வளவு பிரச்னைகள் வருகிறது. இப்போது கூட நான் இந்த காணொளியை எதற்காகப் பதிவிடுகிறேன் என்றால், என்னைப் பார்த்து உதவி செய்யும் சிலர், நமக்கும் இப்படி எல்லாம் பிரச்னை வருமோ என்று பின்வாங்கிவிடக் கூடாது என்பதால்தான்.

நான் உதவி செய்வதை யூடியூபில் போட்டு காசு பார்ப்பதாகக் கூறுகிறார்கள். எனக்கு என்று யூடியூப் சேனல் கூட கிடையாது. நான் காணொளிகளைப் போடுவது இன்ஸ்டாகிராமில்தான். அதில் பணம் கிடையாது. என்னைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்கள்தான் அதை யூடியூபில் போட்டு சம்பாதிக்கிறார்கள். எவ்வளவு வன்மத்தைத் தாண்டி வாழ வேண்டியதாக இருக்கிறது என்பது தெரிகிறது. பிரச்னை இருக்கிறது என்று தான் நல்லது செய்கிறோம். ஆனால் நல்லது செய்வதிலேயே பிரச்னை இருக்கா என்று கேட்டால் நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. இரண்டு நாள்களாக நான் படும் கஷ்டம் அனைத்துக்கும் நன்றி. ஆனால் நீங்கள் செய்வதை எல்லாம் பார்த்து நான் ஓட மாட்டேன். எனக்கென்று மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் கடைசிவரை ஓடுவேன்.”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.