தக் லைஃப் படத்தை வெளியிடுவதற்கு தனிப்பட்ட நபரோ அல்லது குழுவோ தடையாக இருந்தால், கர்நாடக அரசு கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளைத் தொடரலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ் மொழியிலிருந்து கன்னடம் உருவானதாக கமல் ஹாசன் பேசியது கர்நாடகத்தில் சர்ச்சையானது. இதனால், கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகவில்லை. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கமல் ஹாசன் தரப்பில் முறையிடப்பட்டதும் பலனளிக்கவில்லை.
இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் தக் லைஃப் கர்நாடகத்தில் வெளியாகாதது தொடர்பாக மஹேஷ் ரெட்டி என்பவர் பொதுநல மனுவைத் தொடர்ந்தார். கடந்த 17 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "குண்டர்கள் வீதிகளைக் கைப்பற்றுவதை அனுமதிக்க முடியாது. தக் லைஃப் திரையிடப்படுவதை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
கர்நாடக அரசு சார்பில் இதுதொடர்பாக நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. தக் லைஃப் திரையிடப்படுவதற்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. படத் தயாரிப்பாளர் மற்றும் கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபை இடையே தான் பிரச்னை என அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபை சார்பில், "நாங்கள் கடிதம் மட்டும் தான் அனுப்பினோம். பரவலாகப் போராட்டங்கள் இருப்பதால், மன்னிப்பு கூறுவதைப் பரிசீலனை செய்யச் சொன்னோம்" என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
"இந்தப் போராட்டங்களுக்காக படம் வெளியாவது நிறுத்தப்பட வேண்டுமா அல்லது நகைச்சுவைக் கலைஞரின் மேடை நகைச்சுவை நிகழ்ச்சி நிறுத்தப்பட வேண்டுமா அல்லது கவிதை எழுதுவது நிறுத்தப்பட வேண்டுமா? என உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. மேலும், "இந்தியாவில் உணர்வுகளைப் புண்படுத்துவதற்கு முடிவே கிடையாது. நகைச்சுவைக் கலைஞர் ஏதேனும் ஒன்றைக் கூறிவிட்டால், உணர்வுகள் புண்பட்டுவிடும், வன்முறை வெடிக்கும். நாம் எதை நோக்கி பயணிக்கிறோம்?" என்றும் உச்ச நீதிமன்றம் விமர்சித்தது.
கர்நாடக வர்த்தகச் சபை சார்பில் வாதிடுகையில், "நடிகர் மன்னிப்பு கேட்டால் படத்தைத் திரையிடலாம்" என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதற்கு கடிந்துகொண்ட உச்ச நீதிமன்றம், "மன்னிப்பு எங்கிருந்தது வந்தது? சட்டத்தை உங்களுடைய கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது. உணர்வுகள் புண்பட்டால், அவதூறு வழக்கைத் தொடருங்கள்" என்று தெரிவித்தது.
பிறகு, தக் லைஃப் படத்தை வெளியிடுவதற்கு ஆட்சேபனை தெரிவிக்க மாட்டோம் என உச்ச நீதிமன்றம் கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபை ஒப்புக்கொண்டது. இதைத் தொடர்ந்து, வழக்கை முடித்துவைத்த உச்ச நீதிமன்றம், தக் லைஃப் படம் வெளியாவதை யாரேனும் தடுத்தால், அவர்கள் மீது கர்நாடக அரசு கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம் என்று கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியது.