கரூர் துயரச் சம்பவம் காரணமாக சென்னையில் நாளை நிகழவிருந்த காந்தாரா பட விளம்பர நிகழ்ச்சியை ரத்து செய்வதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
கன்னட இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 படம், வரும் அக்டோபர் 2 அன்று வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்றுமுதல் தொடங்கியுள்ளது. படம் வெளியீட்டை முன்னிட்டு படக்குழு பல்வேறு நகர்களில் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி, நாயகி ருக்மனி வசந்த் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் அசம்பாவிதம் காரணமாக சென்னையில் நாளை (செப்.30) திட்டமிடப்பட்டிருந்த ’காந்தாரா சாப்டர் 1’ விளம்பர நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்த சமூக ஊடகப் பதிவில்,
“சமீபத்திய எதிர்பாராத சம்பவத்தைக் கருத்தில் கொண்டு, நாளை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த எங்கள் காந்தாரா சாப்டர் 1 விளம்பர நிகழ்வை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இது பாதிக்கப்பட்டவர்களுக்குத் துணை நிற்க வேண்டிய நேரம் என்று நாங்கள் நம்புகிறோம். கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல் மற்றும் பிரார்த்தனைகள். தமிழகத்தில் உள்ள ரசிகர்களை வேறொரு உரிய நேரத்தில் சந்திக்க ஆவலாக உள்ளோம். உங்கள் புரிதலுக்கும் ஆதரவிற்கும் நன்றி”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.