சினிமா

மிரட்டும் காந்தாரா சாப்டர் 1 டிரைலர்: அக். 2-ல் வெளியீடு | Kantara Chapter 1 |

அக்டோபர் 2-ல் திரையரங்குகளில் பான் இந்தியா படமாக காந்தாரா சாப்டர் 1 வெளியாகிறது.

கிழக்கு நியூஸ்

பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளுடன் காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

கடந்த 2022 செப்டம்பரில் ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாக நடித்த காந்தாரா படம் வெளியானது. கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம், பான் இந்தியா அளவில் பெரும் வெற்றியைப் பெற்றது. ரூ. 400 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியதாகவும் கூறப்படுகிறது. ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் ரிஷப் ஷெட்டி, சப்தமி கெளடா, கிஷோர், அச்சுத் குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில், அதன் அடுத்த பாகமான காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் டிரைலரை சிவகார்த்திகேயன் வெளியிட்டார். கன்னடத்தின் ஹோம்பலே நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் திரைக்கதையை விஜய் கிர்கந்தர் எழுதியுள்ளார். ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஏஸ், மதராஸி படங்களில் நடித்த ருக்மணி வசந்த் நடித்துள்ளார். இவர்களுடன் ஜெயராம், குல்ஷன் தேவய்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 2-ல் திரையரங்குகளில் பான் இந்தியா படமாக காந்தாரா சாப்டர் 1 வெளியாகிறது. மேலும் உலகம் முழுவதும் 30 நாடுகளில் இப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.